சிறுகதை

காதல் விவகாரம் – ராஜா செல்லமுத்து

இந்தக் காதலை என்னால ஏற்றுக் காெள்ள முடியாது. என் பொண்ணப் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.

எந்த வேலையும் இல்லாம வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கிற இவனுக்கு போய் என் பொண்ணை எப்படி கட்டி வைக்க சொல்றீங்க? என்னுடைய தராதரம் என்ன? அவருடைய தராதரம் என்ன? எங்கிட்ட கார், பங்களா, வீடு, புகழ், பேர் எல்லாம் இருக்கு. அவன் கிட்ட என்ன இருக்கு? எப்படியோ என் பொண்ண பேசி மயக்கி காதல் வலையில விழ வச்சிட்டான்; படுபாவி பய . என் பொண்ணு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும் நான் அவனுக்கு கட்டிக் கொடுக்க தயாராக இல்லை என்று வீம்பாக நின்று கொண்டு இருந்தார் தங்கம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் .சில காதல் படங்களைத் தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷமாக தந்தவர் என்று கல்வெட்டாக எழுதப்பட்டிருப்பவர்.

அவரின் மகள் நிரஞ்சனாவைத் தான் விஷ்வா என்ற ஒருவன் காதலித்திருந்தான் .

தன்மகள் நிரஞ்சனா காதல் விவகாரத்தில் தங்கத்தின் உறவினர்கள் திரைத்துறை நண்பர்கள் எல்லாம் கைகோர்த்து இருந்தார்கள்.

எப்படியும் நிரஞ்சனாவை காதலன் விஷ்வாவிடமிருந்து பிரித்து விடுவது என்ற முயற்சியில் இருந்தார்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ; விஷ்வாவிடமிருந்து தன் மகளை பிரித்து விட வேண்டும் என்ற குறிக்கோளில் முனைப்பாக இருந்தார் தங்கம்.

ஒரு சில நேரங்களில் அப்பாவுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்லும் நிரஞ்சனா சில சமயங்களில் விஷ்வாவின் காதலில் மனம் உருகி காதலுடன் சென்று கொள்வதாகவும் சொல்லுவாள்.

இப்படி இருதலைக் கொள்ளியாக இருக்கும் நிரஞ்சனாவை நம்பி என்ன செய்வதென்று புலம்பித்திரித்தார்கள் தங்கத்தின் நண்பர்கள் .

ஒரு வழியாகப் பேசி முடித்து காதலித்த விஷ்வாவை உயிர் பயம் காட்டி அந்தக் காதலை அடியோடு மறக்க வேண்டும் என்று எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

இனி ஒரு முறை நிரஞ்சனாவின் வழியில் வந்தால் ஆளை முடிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார் தங்கம்.

உயிர் பயத்தில் உயிர்க் காதலை விட்டு விட முடிவு செய்திருந்தான் விஷ்வா.அவனின் ஆழமான அந்த காதல் தங்கத்தின் முடிவால் தடங்கல் ஏற்பட்டது.

இனி தனக்கு கவலை இல்லை தன் மகள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோசத்தில் தங்கம் நிம்மதியாக தூங்கினார்.

மறுநாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.

அதில் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

சார் உங்களுடைய மகள் காதல் விவகாரம் என்ன ஆச்சு ?

அது சுமூகமா பிரிச்சாச்சு என்று சந்தோஷத்தோடும் சிரிப்போடும் சொன்னார் தங்கம் .

ஆனா நீங்க படம் எடுக்கிறது வேற ?வாழ்க்கை வேற? அப்படித்தானே சார்? என்று இன்னொரு பத்திரிகையாளர் குறுக்குக் கேள்வி கேட்க

யாரது என்ற அவரைப் பார்த்தார்.

அப்படியெல்லாம் இல்லையே? என்று இடை மறித்தார் தங்கம்.

இல்ல சார் நீங்க தான் பணக்கார வீட்டுப் பொண்ணு. ஒரு ஏழைய காதலிச்சு கல்யாணம் பண்ணி குடும்பத்தோட சந்தோஷமா வாழலாம் . காதலுக்கு பொருளாதாரம், சாதி, மதம், இனம் எதுவும் தடை இல்லைன்னு உங்க முதல் படம் எடுத்து கோடிக்கணக்கா சம்பாரிச்சு இப்ப இந்த இடத்தில் இருக்கிறீங்க .

ஆனா உங்க பொண்ணு ஒரு ஏழைய காதலிச்சா மட்டும் அடிச்சு உயிர் பயம் காட்டி விலக்கி வைக்கிறீங்க. அப்ப உபதேசம் மக்களுக்கு; உங்களுக்கு இல்லையா?

என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்க

முகத்தில் முத்து முத்தாக வேர்த்திருந்த வியர்வைத் துளிகளை எல்லாம் தன் கைகுட்டையால் துடைத்துக் கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினார் தங்கம்.

ஊருக்கு உபதேசம்; பேருக்கு வாழ்க்கை .இந்த உலகம் எப்படி கெட்டுப் போனாலும் பரவாயில்லை

என்று சும்மா இருக்கிறவங்க காதல்ன்ற பேர்ல தூண்டிவிட்டு படம் எடுக்கிறது. அவன் வீட்டுக்கு வந்தா மட்டும் குய்யோன்னு முறையோன்னு அழுகிறது?

என்று அங்கிருந்தவர்கள் பேசிய சத்தம் தங்கத்தின் காதில் விழுந்தது.

தன் மகள் நிரஞ்சனாவை அவள் காதலித்த விஷ்வாவுக்கே திருமணம் செய்ய முடிவு செய்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார் தங்கம்.

தன் மகள் காதலித்தவனை கல்யாணம் செய்து வைப்பதற்கு அன்று தயாராக இருந்தார் தங்கம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *