சிறுகதை

காதல் புறா – ராஜா செல்லமுத்து

பரந்து விரிந்த அந்த அரசாங்க அலுவலகத்தில் 20, 30 மேசைகள் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

ஒவ்வொரு மேசை, நாற்காலிகளுக்கும் ஒவ்வொரு ஊழியராக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அத்தனை ஊழியர்களில் கபிலனும் ஒருவர். கணக்கு வழக்கு பார்க்கும் பிரிவில் மேலாளராக அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

தீர்க்கப்படாத கணக்குகள்; எழுதப்பட்ட கணக்குகள் என்று ஒவ்வொரு ஊழியர்களின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன கணக்குப் புத்தகம்.

மூக்கின் மேல் விழுந்த கண்ணாடியைப் புருவத்தின் மேல் தூக்கி நிறுத்தியபடி கபிலன் ஏதோ ஒரு கணக்குப் புத்தகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் தலைக்கு மேலே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி டக்… டக்…. டக் ….என்ற சத்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காற்றாடியில் ஏதோ மோதுவது போல் சத்தம் கேட்க சட்டென்று மூக்கு கண்ணாடியைத் தன் இடது கையால் பிடித்தபடியே நிமிர்ந்து பார்த்தார் .

20 ,30 காற்றாடிகள் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பரந்து விரிந்த அலுவலகத்தில் ஒரு புறா அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்தவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி இருந்தார்கள்.

ஆனால் கபிலனுக்கு அந்தப் புறா எதற்காக இப்படிப் பறந்து கொண்டிருக்கிறது? மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் இறக்கைகள் அடிபட்டால் தொப்பென்று இறந்து கீழே விழுந்து விடும். அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தன் இருக்கையை விட்டு எழுந்தார் கபிலன்.

அந்தப் புறா அங்குமிங்கும் அலைந்து தன்னுடைய இறக்கைகளையும் உடம்புகளையும் ஓடிக் கொண்டிருக்கும் காற்றாடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தொனியிலேயே சுற்றிக் கொண்டிருந்தது

உஷ்…. உஷ் என்று கபிலன் அந்தப் புறாவைத் துரத்தினார்.

ஆனால் இது எதற்கும் அஞ்சாத அந்தப் புறா காற்றாடி ஓடிக்கொண்டிருக்கும் திசையிலேயே தன்னை நகர்த்திக் கொண்டிருந்தது.

எதற்காக இந்தப் புறா இப்படி பறந்து கொண்டிருக்கிறது? தன்னை மாய்த்துக் கொள்வதற்கு தயாராக இருக்கிறதா? ஒருவேளை காதல் தோல்வியாக இருக்குமோ? இல்லை புறா குடும்பத்தில் சண்டை போட்டுக் கொண்டுத் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு இந்த காற்றாடியைச் சுற்றிக் கொண்டிருக்கிறதா? என்று கபிலனின் மனம் மன்றாடியது

அந்தப் புறாவைப் பார்த்தபோது கபிலனுக்குப் பாவமாக இருந்தது. எழுந்து சென்று அத்தனை காத்தாடியின் சுட்சுகளையும் ஆப் செய்தார்.

என்ன கபிலா , உனக்கு கிறுக்கு ஏதும் பிடிச்சுக்கிருச்சா? காத்தாடி எல்லாம் அமத்துற? வெயிலு வெக்க உடம்பெல்லாம் வேர்வை ஊத்துது. நீயேன் காத்தாடிய அமத்துற? என்று கவலையுடன் பணி புரியும் சக ஊழியர்கள் கேட்க

சார் ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்க. ஒரு புறா நம்ம ஆபீசுக்குள்ள வந்து ரொம்ப நேரமா சுத்திக்கிட்டு இருக்கு . அது தற்கொலை பண்றதுக்கு தான் சுத்திக்கிட்டு இருக்குது. என்னால கண்டுபிடிக்க முடிந்தது. அதோ பாருங்க என்று பறந்து கொண்டிருக்கும் புறாவைக் சுட்டிக்காட்டினார் கபிலன்.

1,2 காத்தாடிகள் ஓடி நின்ற போது ஓடிக்கொண்டிருக்கும் காற்றாடியின் பக்கம் பறந்து கொண்டிருந்தது அந்தப் புறா .

சீக்கிரமா காத்தாடி எல்லாம் அமத்துங்க என்று அங்கு வேலை செய்யும் மொத்த ஊழியர்களும் சொல்ல, அத்தனை பேரும் எழுந்து தத்தம் இருக்கைக்கு மேலே இருக்கும் காற்றாடியின் சுவிட்சுகளை ஆப் செய்தார்கள்.

அதுவரையில் தன்னை மாய்த்துக் கொள்வதற்குத் தயாராக இருந்த அந்தப் புறா எதற்காக இவர்கள் காத்தாடியை அமர்த்தினார்கள் என்று எதிரில் இருந்த சுவரில் அமர்ந்து பார்த்தது

வேகமாகச் சுற்றிய காத்தாடிகள் எல்லாம் சுற்றிச் சுற்றிச் சுற்றி நிற்பதை தன்னுடைய கூர்மையான கண்களால் உற்றுநோக்கி கொண்டிருந்தது .

இப்போது மொத்த காத்தாடிகளும் தன் வேகத்தை மறந்து செல்லமான வேகத்திற்கு குறைந்தன.

இப்போது அத்தனை காத்தாடிகளும் முழுமையாக நின்றிருந்தன.

அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களும் தங்கள் வேலையை மறந்து மின்விசிறியில் அடிபடப் போன அந்தப் புறாவை பார்த்தார்கள்.

அது ஏதோ ஒரு கவலையை மனதில் சுமந்து கொண்டு, சுவரிலிருந்து ஊழியர்களைப் பார்த்தபடியே இருந்தது.

அதற்குள் ஜன்னலில் வழியாக சர் என்று இன்னொரு புறா வந்து மின்விசிறியில் அடிபடப் போன புறாவிடம் அமர்ந்தது.

ஏதோ தன் பாவயில் கிக்கிக்கி என்று கத்தியது. அந்தப் புறாவை சுற்றிச் சுற்றி வட்டமடித்து அமர்ந்தது .

அதுவரையில் வருத்தமாகவும் இறந்து போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அந்த புறாவும் தன் மொழியில் ஏதோ சொல்லியது.

இரண்டு புறாக்களும் தன் அழகிய மூக்கில் ஏதேதோ பேசி கொத்திக் கொண்டன .

மாறி மாறித் தன் இறகுகளை மூக்குகளால் கீறிக் கொண்டன.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் இருந்து பறந்து, ஜன்னல் வழியாக சர் என்று சந்தோசமாக வெளியேறின.

அதுவரையில் அந்தப் புறாக்கள் என்ன செய்கின்றன ?என்று பார்த்துக் கொண்டிருந்த அந்த அரசாங்க ஊழியர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது .

இனி அந்தப் புறா மின்விசிறியில் அடிபட்டு இறந்து விடாது. தன் ஜோடியுடன் சேர்ந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட அந்த ஊழியர்கள் தங்கள் காற்றாடியின் சுவிட்சை ஆன் செய்தார்கள் .

டக் டக் டக் டக் டக் என்று மெல்ல சுற்றிய காத்தாடிகள் வேகமெடுத்தன

இப்பாேது மொத்தக் காத்தாடிகளும் வேகப்படுத்துச் சுற்ற ஆரம்பித்தது.

கபிலன் ஜன்னல் வழியே தூரம் பார்த்தார் .

அந்த புறாவும் கடைசியாக வந்து ஏதோ சமாதானம் சொல்லி வெளியே கூப்பிட்டுக்கொண்டு போன இன்னொரு புறாவும் பூத்துக் குலுங்கும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தங்கள் மொழிகளில் அழகாக பாடிக்கொண்டிருந்தன .

தன் அழகால் ஒன்றின் இறக்கைகளை மற்றொன்று நீவிக் கொண்டிருந்தன .சிரித்தபடியே கபிலன் தன் இருக்கையில் அமர்ந்து மேலே நிமிர்ந்து பார்த்தார்.

அவர் தலைக்கு மேலே இருந்த காற்றாடி இப்போது வேகமெடுத்து வட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *