குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பரபரப்பு
காந்தி நகர், ஆக. 1–
குஜராத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பாஜக முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் படிதார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சர்தார் படேல் குழுமம் மெஹ்சானாவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநில முதல்வர் பேசினார். அப்போது, காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற படிதார் சமூகத்தின் சில பிரிவினரின் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசியபோது, காதல் திருமணம் அரசியல் சாசன ரீதியாக சாத்தியம் என்றால், காதல் திருமணங்களில் பெற்றோரின் அனுமதியை கட்டாயமாக்கும் முறையின் சாத்தியக்கூறுகளை தனது அரசாங்கம் ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார்.
சட்டத் திருத்தம் உருவாகும்
மேலும் சிறுமிகள் காதல் திருமணத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதுகுறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தன்னிடம் கூறினார். மேலும், சிறுமிகள் ஓடிப்போகும் சம்பவங்களைப் பற்றி ஒரு ஆய்வை மேற்கொள்ளவும், அதனால் காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் என்பதற்கு சாத்தியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறினார். பெற்றோரின் சம்மதம் (திருமணங்களுக்கு) கட்டாயமாக்கப்படும் வகையில், சரியான நேரத்தில், அதற்கான சட்ட திருத்தம் உருவாக்கப்படும் என்றார்.