சிறுகதை

காதலுக்குக் கண் இல்லை | ராஜா செல்லமுத்து

Spread the love

சம்பத்தின் அபார திறமையின் மீது எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவருக்கு கண்கள் இரண்டும் தெரியவில்லை என்பதைக் தவிர மற்றபடி அறிவாளி.

‘‘சம்பத் ஒனக்கு ரெண்டு கண்ணு இல்லன்னு கவலபடாதப்பா.. ஒன்னோட பத்து கைவிரல் நகக்கண்ணுகளும் பாக்கற கண்ணுகதான்.. – ஒன்னோட ஒவ்வொரு ஓவியத்திலும் ஒன்னோட முகக்கண்ண விட நகக்கண்ணு பாத்த திருப்தி இருக்கு. அதான் இவ்வளவு நேர்த்தியா.. இருக்கு. ஒவ்வொரு ஓவியமும். நீ..! மனுசப் பெறவி இல்லப்பா..! கடவுள் படைப்புல நீயொரு அதிசயம். இல்லன்னா.. பிறவிக் குருடனா பெறந்த ஒன்னால பாக்குற எல்லாத்தையும் இவ்வளவு அழகா யார்னாலையும் இவ்வளவு தத்ரூபமா ஓவியங்களா வரைய முடியாது..’’ என்று சம்பத்தைப் புகழ்ந்து தள்ளினார் ஒரு நண்பர்

இமைகள் திறந்திருந்தாலும் விழித்த விழி பார்த்தபடியே இருந்த சம்பத்துக்கு அவன் வைத்திருந்த ஓவியக் கண்காட்சியே சான்று. வந்திருந்த அத்தனை பேரையும் உவகையோடு உபசரித்து ஓவியத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள் சம்பத்தின் மனைவி பானு. கண்கள் இழந்த சம்பத்துக்கு கண்களாகவே இருந்த பானுவை அங்கிருந்தவர்கள் பாராட்டாமல் இல்லை. சம்பத் வரைந்த ஓவியங்களை விட அவன் மனைவியையே எல்லோரும் உச்சுக்கொட்டிப் பேசினர்.

‘‘மேடம்..கேக்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க.. நீங்க எப்பிடி..? என்று இழுத்தவரின் கேள்வியைப் புரிந்து கொண்ட பானு,

‘‘சார்.. நீங்க மட்டுமில்ல.. இங்க இருக்கிற எல்லாருமே என்கிட்ட கேக்குற கேள்வியத்தான் நீங்க கேக்கப் போறீங்க..! இதுல நான் என்ன புதுசா வருத்தப்பட மாட்டேன். எனக்கு சம்பத்த புடிச்சிருச்சிருந்துச்சு அவ்வளவு தான்.. நான் அவரோட திறமையைப் பாத்து காதலிக்கல..கல்யாணம் பண்ணல.. அவரோட இந்த நெலமையப் பாத்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. சம்பத் பாவம் சார்.. ரெண்டு கண்ணும் இல்லாம.. இங்க கஷ்டப்பட்டு… ச்சே.. – அத நெனச்சாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. என்னோட வாழ்க்கை போனாலும் பரவாயில்லன்னு தான் சார் இவர நான் ஏத்துக்கிட்டேன். மத்தபடி என்னோட ஆச, பாஷை எல்லாமே

சம்பத்து தான் சார்..’’ என்று அவள் சொல்லும் போதே அவளின் கண்கள் பணித்தன.

‘‘ஸாரி மேடம்.. நான் ஏதாவது தப்பா கேட்டுருந்தா.. என்னைய மன்னிச் சிருங்க..

‘‘நோ சார் இது இயல்பு தானே. இத நீங்க கேக்கலன்னா தான் தப்பு..’’ என்று சொல்லிய பானுவை கையெடுத்துக் கும்பிட்டு விடைபெற்றான் கேள்வி கேட்டவன்.

வரையப்பட்ட ஓவியங்களை எல்லாம் ஆழ்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது கூட்டம். சம்பத் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தான்.

அவன் அருகே வந்த ஒருவர்

‘‘சார்.. நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. இங்க இருக்கிற ஓவியங்களெல்லாம் நீங்க வரஞ்சது தானே..!

‘‘என்னங்க.. இப்பிடி கேட்டுட்டீங்க.. எல்லாமே நான் வரஞ்சது தான்

‘‘எம் மனசுல பட்டத சொல்றேன்..நீங்க இத எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி.. இங்க இருக்கிற எல்லா ஓவியங்கள விடவும் உயிருள்ள ஓவியம் உங்க மனைவி தான் சார்..அவங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு..’’ என்று அவர் சொன்னபோது சம்பத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

‘‘என்ன சார் பேச மாட்டேங்கிறீங்க..! என்றார்.

‘‘ஒண்ணுல்ல சார்..’’என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாகத் தந்தான் சம்பத்.

‘‘உண்மை சார் உங்களோட மனைவி இவ்வளவு அழகா இருக்காங்க.. இவங்க நெனச்சிருந்தா வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாம்.. ஆனா.. ஒங்களுக்காவே இவங்களோட வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்காங்க..’’ என்று அவர் சொன்னபோது இது எதற்கும் பதில் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சம்பத்

**

நாட்கள், மாதங்கள் நகர்ந்தன.

ஒரு நாள் ஒரு வீதியில் பானுவைச் சந்தித்தார் ஒரு பெரியவர்.

‘‘யம்மா..எப்படியிருக்கீங்க..? சார் நலம் தானே..’’ என்று கேட்டார்.

அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமலே இருந்தாள் பானு,

‘‘என்னம்மா என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க..? என்று மறுபடியும் அவரே பேசினார் அவர்.

‘‘இல்ல.. சார். சம்பத் என் கூட இப்ப இல்ல..’’ என்று அவள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் அந்தப் பெரியவர்

‘‘ஏன்.. என்னாச்சும்மா..?

‘‘ஒன்னுல்ல சார்..சும்மா இருக்கும் போது புகழடையாமல் இருக்கும் போதும் தேவப்பட்ட நான்.. அவர் புகழடையும் போது தேவப்படாம போயிட்டேன் சார்..’’

‘‘என்ன சொல்றம்மா.. எனக்கு ஒன்னும் புரியலையே..!

‘‘அவரு வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு.. சார்..’’

‘‘பானு.. என்ன சொல்றம்மா..’’

‘‘ஆமா சார்.. நான் காதலுக்கு கண் இல்லன்னு நெனச்சுத் தான் அவர காதலிச்சு என்னோட வாழ்க்கையையே அழிச்சு அவர கல்யாணம் பண்ணுனேன். அவரும் அப்பிடித்தான் சார்.. காதலுக்கு கண் இல்லன்னு இப்ப வேறொரு பொண்ணோட வாழ்ந்திட்டு இருக்காரு..’’ என்று பானு சொன்ன போது…..

அந்தப் பெரியவருக்கு கண்கள் இரண்டும் இருட்டுக்கட்டிக் கொண்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *