சிறுகதை

‘‘காதலின் பின் பகுதி…’’ | ராஜா செல்லமுத்து

சேகரனுக்குள் சேதாரம் கூடிக் கொண்டே சென்றது. முகச்சவரம் செய்ய முடியாமல் திணறினான்.

அவன் எண்ணம் முழுவதும் சுகிதாவே நிறைந்திருந்தாள். இழுத்து விடும் மூச்சில் சுகிதாவே முழுவதும் வந்து விழுந்தாள்.

நாளுக்கு நாள் அவன் சாப்பிடும் உணவின் அளவு குறைந்தது. உடம்பு நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே போனது.

சேகரனுக்கு பொண்ணு பாப்பமா? என்ற அப்பா தனசேகரின் வார்த்தை அம்மா புஷ்பாவை என்னவோ செய்தது.

இப்ப போயி எப்படிங்க

‘ஏன்? முடியாதா?

‘ஆமா… என்னால கேட்க முடியாது. அப்ப நான் கேட்கவா?

வேணாமே…

ஏன்?

அவனோட மனச தெரிஞ்ச நாமளே அவன காயப்படுத்தினா எப்பிடீங்க… கொஞ்ச நாள் விட்டு புடிக்கலாமே’’

‘இல்ல புஷ்பம், அவன் தினமும் எப்பிடி தேஞ்சிட்டு போயிட்டு இருக்கான்னு பாரு தாடியும். அவனும் அவன பாத்தாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ஊருக்குள்ள என்னமோ மாதிரி பேசுறாங்க. இவனுக்கு ஒரு கால்கட்ட போட்டு விட்டாத்தான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்! என்ற அப்பா தனசேகரின் பேச்சில் கொஞ்சம் மூர்க்கம் தெரிந்தது. ‘புஷ்பம்’ பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அறையின் உள்ளே இருந்து குபு குபு குபுவென புகை வெளியே வந்து கொண்டிருந்தது.

பாத்தியா, அண்ணன் ரெயில் புகை விட்டுட்டு இருக்காரு’

‘ம்’ என்ற புஷ்பம் புகை வரும் அறையை நோக்கி திரும்பினாள்.

விரலிடுக்கில் பிடித்த சிகரெட்டை வாயில் வைத்து ‘பக் பக் ’ என வெட்டி வெட்டி விட்டம் பார்த்தப்படியே புகையை உள் நெஞ்சுக்குள் இழுத்து ‘ப்பூ’ என அதை விலா எலும்புக்குள் விளையாட விட்டு, மெல்ல மெல்ல உதட்டின் வழியே வெளிவிட்டான் சேகரன்.

அவன் எண்ணப் பறவைகள் எங்கெங்கோ சென்று மீண்டும் சுகிதாவே வந்து நின்றாள்.

‘சேகரு… சேகரு…’ புஷ்பத்தின் குரல், அவன் செவிகளில் போய்ச் சேர்ந்தாலும் அதைச் சட்டை செய்யாமலே இருந்தான்.

‘சேகரு சேகரு… அப்பாவும் தன் பங்குக்குக் கூப்பிட்டார்.

‘ம்ஹூகும். அவன் செவி சாய்க்கவே இல்லை.

என்னடி இவன். இப்படி பித்து பிடிச்சவன் மாதிரியே உட்கார்ந்திருக்கான்.

‘‘ஆமா… … பின்ன இருக்காதா என்ன? வலி… காதலோட வலி என்னன்னு தெரியாம நான் பேசல… ஆனா இப்பிடியே உட்கார்ந்திருந்தான்னா, வாழ்க்கை நிர்மூலமாகிப் போகும்டி’ என்று வருத்தம் கலந்த வார்த்தைகளில் பேசினார் தனசேகர்.

கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காத சேகரனைத் தேடி புஷ்பாவே அவன் இருக்கும் அறைக்குள் முன்னேறிச் சென்றாள்.

அவனுக்கு கண்ணீரும் புகையும் நிற்காமலே வந்து கொண்டிருந்தது.

‘சேகரு சேகரு… அழுகை கலந்த குரலில் கூப்பிட்டும் அவன் அசையாமலே இருந்தான்.

‘புரியுதுடா… இப்ப என்ன பண்ணச் சொல்ற?

போனது திரும்பி வருமா என்ன?

அவ தான் உன்னைய விட்டுட்டு போயிட்டாளே. நீ மட்டும் இப்பிடி உட்கார்ந்திருந்தா சரியாப் போகுமா என்ன?

உன்னோட உணர்வு அவளுக்கும் இருக்கணுமேடா. ரெண்டு கையும் சேந்தாத் தான் சத்தம் வரும்.

ஒரு கை ஓசை எடுபடாதுடா வா. இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. சந்தோசமான வாழ்க்கைய ஏன் இப்படி சங்கடமான வாழ்க்கையா மாத்துற… பொண்ணு பாக்கவா…’’ என்று புஷ்பம் பேசுவதைக் கேட்ட சேகரன் இன்னும் கொஞ்சம் அதிகமாவே அழுதான்.

‘டேய் லூசு… ஒரு பொண்ணுக்காக இப்பிடி அழுறது கோழைத்தனம்டா விட்டுரு’ என்றபடியே அப்பாவும் வந்து சேந்தார்.

இரண்டு பேரையும் ஒரு சேரப் பார்த்த சேகருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘முடியலப்பா’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு அழுது கொண்டே இருந்தான்.

‘டேய்… டேய்… லூசு… மொதல்ல அழுகைய நிறுத்துடா,

இந்தக் காலத்துல காதல்ங்கிறது சும்மாடா. பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர்ன்னு பொழுது போக்கு காதல் தான் அதிகம். உயிர்க் காதல்ங்கிறது வெறும் வெத்துப் பேப்பரு’ உண்மைக் காதல் அப்படியெல்லாம் இங்க எதுவும் இல்ல என்று தனசேகர் சொன்னபோது புஷ்பத்தின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

என்ன பாக்குற, உங்க அம்மா ஏன் இப்படி அழுகுறாருன்னா . அதுக்கு ஒரு காரணம் இருக்கு என்று முடிச்சு போட்டார் தனசேகர்.

அம்மா புஷ்பம் அழுது கொண்டே இருந்தாள்.

தம்பி, உனக்கு மட்டும் தான் காதல் தோல்வியா? என்று சொல்லிவிட்டு அப்பாவும் அழுதார்.

‘புஷ்பம் வேண்டாம்’ என்று இடை மறித்தாள்.

‘இல்ல இப்ப சொல்லாம பெறகு எப்ப சொல்லப் போறோம் – உண்மைய சொல்லுவோம் என்ற தனசேகர் வாய் திறந்தார்,

உங்க அம்மாவும் நானும் கூட லவ் பெயிலர் தான். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு, சந்தோசமா இருக்கலையா என்ன? அதுவும் ‘உன்ன மாதிரி ஒரு அழகான ஆண் பிள்ளைய பெத்துட்டமே’ இங்க எல்லாருமே ஏதோ ஒரு வலியில வாழ்ந்துட்டு தான் இருக்காங்க’ என்ற அப்பாவின் வார்த்தைகள் – சேகரனை என்னவோ செய்தது.

‘அப்பா’ என்று உள்நெஞ்சு வலிக்கக் கூப்பிட்டான்.

பொல பொலவென கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் புஷ்பம் ; தனசேகரின் கண்களும் நீர் பனித்தன.

இப்போது சேகரனின் காதல் வலி அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *