போஸ்டர் செய்தி

காதலன் அரிவாளால் வெட்டிய பெண் அதிகாரி: மருத்துவமனையில் நேரில் பார்த்து ரெயில்வே டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை

Spread the love

சென்னை, ஜூன் 15

அரிவாளால் காதலன் வெட்டியதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தேனிமொழியை ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை நேரில் சென்று பார்த்தார்.

டாக்டர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அவரது நிலைமை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு கூறுகையில்,

தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். நலமாக உள்ளார். நன்றாக பேசுகிறார் என தெரிவித்தார். விரைவில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்ற சேத்துப்பட் ரெயில் நிலையத்தில் டிஜிபி சைலேந்திர பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரிவாள் வெட்டுகாயமடைந்த பெண் அதிகாரி தேன்மொழி

 

ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி(வயது 26). இவரது தந்தை பெயர் வீரமணி. பட்டதாரியான இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்தார். சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார்.

இவரும் சுரேந்தர்(27) என்ற வாலிபரும் காதலித்ததாக தெரிகிறது. இவரும் ஈரோடு மாவட்டம் ரூபின் பாக் பகுதியைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர், சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து வந்தார். இருவரும் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 7.50 மணி அளவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் பின்னர் நின்று கொண்டு பேசினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து தேன்மொழி மீது பாய்ந்தார். அவரைக் கீழே தள்ளி அரிவாளால் வெட்டினார்.

இதில், தேன்மொழியின் தாடை, கன்னத்தில் பலத்த வெட்டு விழுந்தது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்தது. உடனே சுரேந்தர் அந்த ரெயில் முன் பாய்ந்தார். ஆனால் ரெயில் என்ஜின் சற்று முன்னால் சென்றுவிட்டது. சுரேந்தர் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த அவரும் உயிருக்கு போராடினார்.

தற்கொலைக்கு முயன்ற காதலன் சுரேந்தர்

இதுபற்றி பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரோகித்நாதன் ராஜகோபால், போலீஸ் படையோடு ரெயில் நிலையத்துக்கு விரைந்தார். ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த தேன்மொழி உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு தாடை, முகத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு தையல் போட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுரேந்தர் அரசு ராஜீவ்காந்தி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு சுயநினைவு வரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 ஆண்டுக்கு முன் ஸ்வாதி படுகொலை

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை ஒருதலையாக காதலித்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வெட்டி வீழ்த்தினார்.போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமாரும் புழல் மத்திய சிறையில் இறந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *