செய்திகள்

காதலனிடம் சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் 40 சவரன் நகை பறிப்பு

பொறிவைத்து 2 பேரை கைது செய்த போலீஸ்

சென்னை, ஜன. 23–

சென்னையைச் சேர்ந்த இளம் பெண்ணை, காதலனிடம் சேர்த்து வைப்பதாக, 40 சவரன் தங்க நகைகளை பறித்த 2 பஞ்சாப் ஆசாமிகளை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் காதலில் தோல்வி அடைந்தார். இதை அடுத்து, இணையதளங்களை ஆய்வு செய்தபோது, ‘ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்’ என்ற செயலி, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அந்த இளம் பெண், அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இளம் பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட 2 பேர், சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். இந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த இரு இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என்று பணம் அல்லது தங்க நகை கேட்டனர். இளம் பெண் 40 சவரன் தங்க நகைகளை, சென்னை விமான நிலையத்தில் வைத்து அவர்களிடம் கொடுத்தார்.

பஞ்சாப் ஆசாமிகள் கைது

தங்க நகைகளை வாங்கிச் சென்ற அவர்கள், காதலனோடு சேர்த்து வைக்கவில்லை என்பதுடன், மேலும் ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்றும் இல்லையென்றால் உன்னை பற்றி இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பதறிப்போன இளம் பெண், சென்னை விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரை பெற்ற போலீசார், நகையை ஏமாற்றிய இளைஞர்களை தொடர்பு கொண்டு பணம் தருவதாக கூறச் செய்தனர். இளம் பெண்ணிடம் பணம் பெறலாம் என்று பஞ்சாபில் இருந்து விமானத்தில் வந்த அனில் குமார் (வயது 27), ககன்தீப் பார்கவ் (வயது 33) ஆகியோரை சாதாரண உடை அணிந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் 2 பேரும் போலியான இணையதளத்தை தொடங்கி, பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *