கதைகள் செய்திகள் விழாக்கள்

காதணி விழா…! – 2 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை பேரும் அந்த ஊர்ச் சாவடியில் நிறைந்திருந்தார்கள்.

என்ன நடக்கப் போகிறது? என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்

“ஏம்மா இது நல்லா இருக்கா என்ன? கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டியதுதானே? நாலு மக்க மனுஷங்களுக்கு நல்லது செய்யத்தான சொந்த பந்தங்க. இப்படி பேசுறது உறவு முறையை முடிச்சிட்டு போறது மாதிரி இருக்குமே? இது தப்பு. இது இன்னைக்கோட முடியுற விசயம் இல்ல. ஆயிரம் காலத்துப் பயிறு. வேரு மாதிரி நிக்கிற இந்த உறவ இப்படி வேர் அறுக்கிறது மாதிரி பேசுறது வேற மாதிரி இருக்கும்மா”

என்று ஊர்ப் பெரிய தனம் சொல்ல அதைக் கேட்க மறுத்தாள் ராஜேஸ்வரி.

“இல்லங்க. எல்லாத்தையும் முடிச்சு விட்ருங்க. எங்களுக்கு எந்த ஒட்டும் வேணாம். உறவும் வேணாம். ரொம்ப தப்பா இருக்கு. இவங்க கிட்ட செய்முறைய செஞ்சிட்டு, இப்படி கேவலப்படனும்னு இல்ல. நாங்க ஒன்னும் போக்கத்து, வக்கத்துப் போயி கெடக்கல. வாழ்ந்தா இப்படித்தான் வாழனும் அப்படிங்கற வரைமுறைய வச்சு வாழ்றவங்க. என்ன ஏதுன்னு கேட்டுட்டு, நாங்க செஞ்ச செய்முறைய கொடுத்துட்டீங்கன்னா, அவங்க யாரோ ? நாங்க

யாரோன்னு ? வெலகிப் போயிருவோம் .அப்புறம் சொந்த பந்தம், தொப்புள் கொடி உறவு அப்படிங்கிற எதுவும் எங்களுக்கு வேணாம். “

என்று எடுத்தெறிந்து பேசினாள், ராஜேஸ்வரி. அவள் பேசுவதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்காமல் அமர்ந்திருந்தார், அவளது கணவர் கங்கையா.

” என்னப்பா கங்கையா. உன் பொண்டாட்டி பேசுறது நல்லா இருக்கா என்ன? நீ ஏன் எதுவும் சொல்லக் கூடாதா ? “

என்று சுத்தி இருந்தவர்கள் கேட்க

” நான் என்னங்க சொல்றது? என் பொண்டாட்டி என்ன சொல்றாளோ? அது தான் முடிவு.இப்ப ஒன்னு பேசிட்டு வீட்ல போய் ஒன்னு பேசினா வீட்டுல நான் குடியிருக்க முடியாது. நாங்க செஞ்ச செய்முறையைக் கொடுக்கச் சொல்லுங்க” என்று கங்கையாவும் பேச,

“ஏப்பா, காளியம்மா உன் அக்கா தானே ? அக்கா மகனுக்கு காது குத்து வச்சு செய்முறை செஞ்சத திரும்ப கேக்கிறது தப்பு இல்லையா? “

என்று அங்கே சுத்தி இருப்பவர்கள் எல்லாம் கேட்க

” தப்பு தாங்க. ஆனா அவங்களுடைய குணம் சரியில்ல. எங்களுக்கு பிடிக்காதவங்க கூட எல்லாம் பேசுறாங்க. ஊர்ப் பொறணி அத்தனையும் அப்படியே பேசுறாங்க. இம்புட்டுதான் செய்முறை செஞ்சோம்னு ஊர் உலகமெல்லாம் ஒப்பிச்சுக்கிட்டு இருக்காங்க .அதனால எங்களுக்கும் மானம் வெக்கம் ராேசம் இருக்கு. அவங்க வேற யாரையாவது தாய்மாமனா வச்சிட்டுப் போகட்டும் .அது எங்களுக்கு கவலை இல்ல. நாங்க செஞ்ச செய்முறைய கொடுத்தா போதும் “

என்று கங்கையாவும் அவர் பங்குக்குப் பேச

” ஏம்மா காளியம்மா நீங்க என்ன சொல்றீங்க .உங்க தம்பி தானே தங்கையா ?.அவங்க செஞ்ச செய்முறையக் கேட்டு நிற்கிறாங்க. நீங்க என்ன சொல்றீங்க”

என்று அங்கிருந்த ஒரு பெரியவர் கேட்க

“அவங்க என்ன சொல்றாங்களோ அதச் செய்யுங்க. சொந்த பந்தம் வேணுமுன்னு தான் செய்முறைய நாங்க வச்சோம். ஆனா, அத தப்பா புரிஞ்சுகிட்டாங்க அவங்களுக்கு வேணாம்னா, அவங்க கேட்டத குடுங்க “

என்று காளியம்மாள் சொல்லஅவளின் கணவர சின்னச்சாமி எதுவும் பேசாமல் இருந்தார்.

” என்னப்பா சின்னச்சாமி. உன் பொஞ்சாதி சொல்றது சரிதானா? இல்ல அப்படியே முடிச்சிடலாமா?”

என்று சிலர் கேட்க

“ஆமாங்க அப்படியே முடிச்சிடுங்க. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம். அவங்க என்ன செஞ்சாங்களோ அத அப்படியே கொடுத்துடுங்க ” என்று சின்னச்சாமி சொல்ல

“இது என்னப்பா வம்பாப் போச்சு. ரெண்டு வயசுப் பையனுக்கு மொட்டை எடுத்து, காதுகுத்து வச்சு, குடும்பம் எல்லாம் ஒன்னு சேந்து சந்தோஷமா இருப்பாங்கன்னா, இங்க காதுகுத்து வச்சு கலவரம் ஆகி. குடும்பம் அந்தல சிந்தலையா பிரியுது. அது தான் வருத்தமா இருக்கு “

என்றார்கள் அங்கு கூடி இருந்தவர்கள்.

சரி நீங்க செஞ்ச செய்முறையை சொல்லுங்க ராஜேஸ்வரி” என்ற அங்கு இருந்தவர்கள் கேட்க

” கொடி கொலுசு. புள்ளைக்கு சட்டத் துணி, ஜட்டி. கண் மை டப்பா .பவுடர் டப்பா, அரைப் பவுன் தங்கத் தோடு. ரெண்டு சீப்பு வாழைப்பழம் .அஞ்சு தேங்காய், ரெண்டுபிடி பச்சரிசி. ஒரு கிலோ திராட்சை பழம் பத்துக் கொய்யாப்பழம், பேரிச்சம் பழம் தட்டு ஒன்னு .ஏழு சில்வர் தட்டு. கொட்டு அடிக்க ஆயிரம் ரூபாய். கொடைக்கு ஐநூறு ரூபா. வந்தவன் போனவனுக்கு தண்ணி வாங்கி கொடுத்தது மூவாயிரம் ரூபா அப்படி இப்படின்னு சில்லறைச் செலவே இருபது ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆயிடுச்சு.. இதெல்லாம் மொத்தமாக் குடுத்துட்டு எங்களுக்கும் காளியம்மா குடும்பத்துக்கும் எந்த உறவு இல்லன்னு எழுதி குடுங்க” என்று ராஜேஸ்வரி சொல்ல

“என்னம்மா இவங்க சொல்றதெல்லாம் கொடுத்தாங்களா ? அது உண்மையா?”

என்று அங்கு கூடியிருந்தவர்கள் கேட்க

“அவங்க சொல்றதெல்லாம் நெசந்தாங்க . ஆனா ரெண்டு சீப்பு வாழைப்பழத்தில பாதிய காணோம் .கொண்டு வந்த தேங்காயில பாதி குறையுது. அரிசி சரியில்லை, திராட்சை அழுகிப்போச்சு. இப்படி எத்தனையோ குத்தம் இருந்தாலும் அவங்க கொண்டு வந்தத அப்படியே கொடுத்துருங்க” என்று ராஜேஸ்வரி சொல்ல

தாய்மாமன் முறைக்கு செய்த அத்தனையும் சாவடியில் கொண்டு வந்து வைத்தாள் காளியம்மாள்.

” நீ கொடுத்ததெல்லாம் சரியா இருக்கான்னு எண்ணிப் பாத்துக்க. அப்புறம் வாங்கிட்டு போயிட்டு குத்துது குடையுதுன்னு, இதுல குறையுதுன்னு இங்க வந்து நிக்கக் கூடாது “

என்று பெரியவர்கள் சொல்ல ராஜேஸ்வரி சொன்ன அத்தனையும் வீதியில் பரப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொன்றாக பார்த்தாள் ராஜேஸ்வரி

” சரிம்மா இப்ப கடைசியா ஒரு முடிவு சொல்லு”

என்று ராஜேஸ்வரியிடம் கேட்க

” என்னத்த முடிவு சொல்றது. என் புருஷன் தான் காளியம்மா மகனுக்கு தாய் மாமன். ஆனா இது இப்பதான் இல்லன்னு ஆகிப் போச்சு. காதுகுத்து சண்ட பெருசாகிப் போச்சு. இனி கல்யாணம் காச்சி முடிக்கும் போது, எங்களுக்கு என்ன ஏகப்பட்ட செலவாகும் .அதுக்கு நாங்க ஒத்து வர மாட்டோம். சரிப்பட்டு வர மாட்டோம். அதனால காளியம்மாவுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லன்னு எழுதி குடுங்க .அது போதும் ” என்ற ராஜேஸ்வரி சொல்ல

” என்னம்மா காளியம்மா அவங்க சொல்றத செஞ்சிரலாமா”

“சரிங்க உரித்தானவங்களுக்கே உரிமை இல்லாதபோது, நான் என்னத்தங்க பேசுறது .கூடப் பிறந்தது ஒன்னு .அதுவா அறுத்துவிட்டு போகும் போது, மத்ததச் சொல்லி என்ன பிரயோஜனம்? கடவுள் துணை இருக்காரு. எங்களுக்கு நாலு மக்க மனுசங்க எங்கள பாப்பாங்க. தாய்மான்க கிடைக்காமலா போவாங்க.? என்ன இந்த பொழப்பு ” என்று அழுது கொண்டிருந்தாள், காளியம்மாள்.

இரண்டு குடும்பத்திற்கான உறவு முறிவுப் பத்திரம் எழுதப்பட்டது.

” சரி கையெழுத்து போடுங்க” என்ற போது, முதல் ஆளாக முதல் கையெழுத்தை ராஜேஸ்வரி போட்டாள்.

காளியம்மாள் தன் கையில் இருந்த பிள்ளையைக் காணாமல் தேடிய போது, அது நடந்து சென்று கங்கையாவின் அருகில் போய் நின்றது.

“மாமா ஏன் அம்மா அழுகுது? எதுக்காக இங்க எல்லாம் நீங்க சேர்ந்து இருக்கீங்க .வாங்க வீட்டுக்கு போகலாம்”

என்று ஒன்றும் அறியாத குழந்தை சொன்ன போது, அங்கே கூடியிருந்தவர்களுக்கெல்லாம் பெரிய தர்ம சங்கடமாகப் போனது.

“என்னப்பா விவரம் தெரிஞ்ச பெரியவங்க எல்லாம் செஞ்ச செய்முறைய கேட்டு அடிச்சு சண்டை போட்டு கூட பிறந்ததும் இல்ல பெத்ததும் இல்ல பிறந்ததும் இல்லைன்னு சொல்லி எழுதி வாங்கிக்கிட்டு இருக்கீங்க . ஆனா இங்க நடக்கிறது எதுவுமே இந்தப் பச்சை மண்ணுக்கு தெரியல பாருங்க. குடும்பத்தில சண்டை போட்டு, குழந்தை காதுகுத்துக்கு செய்முறை செஞ்ச நகைகள திருப்பி வாங்கிட்டு இருக்கிங்க. ஆனா, இது எதுவும் தெரியாம கங்கையா கிட்ட போய் நிக்குது அந்தக் குழந்தை. இது தான்யா சாமிங்கிறது .போங்கய்யா நீங்களும் உங்க பஞ்சாயத்தும்; இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருங்க . புடிக்கலையா கொஞ்ச நாள் பேசாம இருங்க. கோவத்தில எடுக்கிற எந்த முடிவும் சரியா வராது. கொஞ்ச நாளு கோபத்தை ஆறப் போட்டுட்டு அப்புறம் வந்து பாருங்க. எல்லாம் சரியா போகும் “

என்று அங்கிருந்த பெரியவர் சொல்ல ராஜேஸ்வரிக்கும் என்ன செல்வதென்றே தெரியவில்லை. பிறப்பு முறிப் பத்திரத்தை கையில் எடுத்த குழந்தை அது என்ன? எது? என்று தெரியாமல் கிழித்தது. அதற்கு மேல் அந்தக் கூட்டம் அங்கு ஒன்று கூடி இருக்கவில்லை. திசைக் கொன்றாக தெறித்து ஓடியது.

” வாங்க வீட்டுக்கு போலாம் ” என்ற அந்தக் குழந்தை ராஜேஸ்வரியிடம் எகிற அதுவரை ராட்சசி போல வில்லியாகத் தெரிந்தவள்

” என்னை மன்னிச்சிரும்மா “

என்று அந்தக் குழந்தையின் காலில் விழுந்தாள். ஏற்கனவே குத்தப்பட்ட அந்தக் காது நகை குழந்தையின் காதில் இல்லாமல் இருந்தது. பஞ்சாயத்து செய்து வாங்கிய தங்க நகையை வாங்கி மறுபடியும் அந்தக் குழந்தையின் காதில் குத்திவிட்டாள் ராஜேஸ்வரி.

அஞ்சு லட்ச ரூபா செலவு செஞ்சு, ஊர் உலகத்துக்கு எல்லாம் சாப்பாடு போட்டு, காது குத்துன்னு நீங்க செலவழிச்சீங்க. ஆனா இப்ப பாருங்க ஒத்தக் காசு செலவு இல்லாம, இப்ப இந்தக் குழந்தை காதணி விழாவில நடந்த சண்டைய சத்தம் இல்லாம சேத்து வச்சுருச்சு.பொசுக்கு பொசுக்குன்னு கோவப்பட்டா யாரும் இங்க உசுரு வாழ முடியாது. பொறுமையா இருந்தா மட்டும் தான் இந்த பூமியில் பிழைக்க முடியும் “

என்று அங்கு இருந்த ஒரு பெரிய மனுஷன் ஒருவர் சொல்ல ,பிரிந்து போய் நின்றிருந்த அந்தக் குடும்பம் அந்தச் சிறு குழந்தையின் முயற்சியால் ஒன்றாகச் சேர்ந்தது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்கள்

காதணி விழாவில், காதில் குத்தப்பட்ட தங்க நகையோடு அந்தத் குழந்தையைத் தூக்கினாள், ராஜேஸ்வரி. உடன் எல்லோரும் சென்றார்கள். இதற்கு முன்னால் சண்டை போட்ட ராஜேஸ்வரியின் தோளில் அமர்ந்து கைதட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *