செய்திகள்

காணும் பொங்கல்: சென்னை கடற்கரையில் காணாமல் போன 27 குழந்தைகளை மீட்பு

பெற்றோரிடம் ஒப்படைத்த சென்னை போலீசார்

சென்னை, ஜன. 18–

காணும் பொங்கல் அன்று மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் காணாமல் போன 27 குழந்தைகள் சென்னை பெருநகர காவல் குழுவினரால் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

17.01.2024 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் மேற்பார்வையில் 15,500 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி கடற்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பேரில், அண்ணாசதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழைப்பாளர் சிலை முதல் கண்ணகிசிலை வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் 23 குழந்தைகள், மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 2 குழந்தைகள் மற்றும் சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 2 குழந்தைகள் என மொத்தம் காணாமல் போன 27 குழந்தைகள் சென்னை பெருநகர காவல் குழுவினரால் மீட்கப்பட்டு, பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *