சிறுகதை

காணவில்லை | ராஜா செல்லமுத்து

Spread the love

‘‘இருக்கும் போது தெரியாதது , இல்லாத போது தான், தெரியும்…’’

சாரை சாரையாய் ஆட்கள் வந்து கொண்டிருந்தனர்.

ஒருவர் முகத்தில் கூட ஈயாடவில்லை.

விஜயா வெறுமனே உட்கார்ந்திருந்தாள்.

மூச்சுவிடுவது, மட்டுமே அவள் செய்து கொண்டிருந்தாள். மேலும் கீழும் ஏறி இறங்கும் உடம்பே அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொன்னது.

ஏய்… விஜயா. என்ன நடந்தச்சு. ஏன் இப்படி ஆச்சு . கொஞ்சம் வெவரமாச் சொல்ல முடியுமா?

என்று உறவுப்பெண் ஒருத்தி கேட்டபோது தலையை மட்டுமே சாய்த்துப் பார்த்த் விஜயாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

வாய் திறந்து பேசத் திராணியில்லாதவளின் கண்ணீரே ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது.

ராமு, அப்படிபட்ட மனுசன் இல்ல. ஆனா,இப்ப திடீர்ன்னு அவர் எடுத்த முடிவு தான் நம்மள திணர வைக்குது ராமு

மாமா காணாமல் போயி இன்னையேடு எத்தனை நாள் ஆச்சு?

‘ஒரு வாரம்’

‘ஒரு வாரம்’?

ஆமா…

‘ஒரு வாரமா, எங்க போனாருன்னு தெரியலையே.

‘ம்’

‘சொந்த பந்தங்கள் இருக்கிற எடங்களுக்கு சொல்லி விடுங்க..கூடவே பேப்பர், மீடியாவுக்கு விசயத்த சொல்லுங்க.ஒரு வாரம்ங்கிறது ரொம்ப நாள். ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா, நமக்கு தான் பிரச்சனை என்று கூடியிருந்த உறவுப்பெண் ஒருத்தி சொல்ல.,

சுற்றியிருப்பவர்களும் அதே சுப்பிரபாதத்தையே சுதி விலகாமல் சொன்னார்கள்.

விஜயா, உண்மைய சொல்லு.வீட்ட விட்டு ஓடுற அளவுக்கு என்ன பண்ணுன? நீ தான் ஏதோ எடக்கு முடக்கா செஞ்சிருப்ப. இல்லன்னா இந்த எழுவது வயசில இப்படி வீட்ட விட்டு ஓடியிருப்பாங்களா என்ன?

ஒருத்தி சொன்னது தான் தாமதம்

‘இல்ல அப்படியெல்லாம் ஏதும் இல்ல என்று அந்த வீடே அதிரும்படி கத்தினாள் விஜயா.

அப்பறம் எதுக்கு வீட்ட விட்டு வெளியேறுனாரு….?

உண்மையைச் சொன்னாத்தானே என்ன ஏதுன்னு கேக்க முடியும் ? என்று விஜயாவை வினாக்களால் விலா எலும்புகளைக் குத்திக் கிழித்தனர்.

எனக்கொன்ன தெரியும். எப்பவும் போல தான் வீட்டுக்கு வந்தாரு. சும்மா பேசிட்டுதான் இருந்தேன். பேச்சுல கொஞ்சம் சூடு ஏறுச்சு. நான் தான் அதிகமா பேசிட்டேன். சட்டுன்னு வெளியே எந்திருச்சு போனாரு.

ஏதோ சும்மா தான் வெளிய போனாரு. வந்திருவாருன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் . ஆனா இப்படி பன்னுவாருன்னு நெனச்சே பாக்கல.

போன மனுசன் போனவருதான். இன்னையோட ஒருவாரம் ஆகிப்போச்சு. என்னாச்சுன்னு தெரியல… என்று விஜயா கண்ணீரோடு சொன்ன போது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை.

‘நெசம் தான். நம்புங்க..

நான் சொல்றது உண்மை. இதுல எந்த பொய்யும் இல்ல’என்று விஜயா சொன்னாலும் அதை நம்புவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.

‘ஐயோ’ நான் தப்பு பண்ணலே……

என்னைய நம்புங்க என்று கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தாள் விஜயா.

விஜயா கொஞ்சம் துடுக்குக்காரி.வாய் பேசத்தான் செய்வா.என்ன பேசுறோம்னு தெரியாது. அவ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி தான் பேசுவா. ஆனா மனசுல ஏதும் வச்சுக்க மாட்டாளே..

‘ம்’ இது ஏதோ இன்னைக்கு நேத்து நடந்ததா இருக்காது.

தெனந்தோறும் போராட்டம் நடந்திட்டு தான் இருந்திருக்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல தாங்காத கிழவன் தான் பிச்சுக்கிட்டு போயிட்டாருன்னு நெனைக்கிறேன்….

‘ஆமா, நீங்க சொல்றது தான் உண்மை. இந்தக் கிழவி ஏதாவது ஒன்ன பேசிட்டே இருந்திருக்கும்.

அதான் மனுசன் கிளம்பிட்டாரு போல என்று உதட்டில் ஈரமில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர்.

என்ன நம்பலையா? நீங்க நம்பலையா? என்று சுவற்றில் ‘டம் டம்’ என மோதினாள்.

ஏய். நீ என்ன முட்டியே செத்துப்போவியா ? அந்த மனுசன் ஓடுனா நீ என்ன செய்வ? என்ற ஒருத்தி விஜயாவை ஆதரவாக பிடித்தாள்.

இது பெருசா தெரியாம இருக்கலாம் . என்னோட மனசு என்ன பாடுபடுது தெரியுமா? குடிக்கிற கஞ்சி கூட சேர மாட்டேங்குது. தலை வச்சுப்படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ஒரு மனுசன் இருக்கும் போது தெரியாத அருமை. இல்லாத போது தான் தெரிய வரும்.

விஜயா இப்ப அனுபவிக்கிறா. இன்னும் அனுவிப்பா..என்று சொல்ல தலைவிரிக் கோலமாய்க் கிடந்தாள் விஜயா.

ஆளுக தேடிட்டு இருக்கங்களா?

‘ஆமா’

கிடைப்பாரா?

கடவுளுக்குத்தான் தெரியும்.மனசு வெறுத்து ஓடுனவன் மறுபடியும் வர சாத்தியமில்ல..

உசுரோட இருந்தா வைராக்கியத்தில் வரவே மாட்டான். ஒரு வேள ஏதாவது ஏடாகூடமா நடந்தா தான் அவர் இங்க வருவாரு பொறுத்திருந்து பாப்போம். இதுக்கு என்ன தீர்வுன்னு ஒருவர் சொன்ன போது.

விஜயா முட்டி முட்டி அழுது கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *