சிறுகதை

காணவில்லை – ஆவடி ரமேஷ்குமார்

பெங்களூர்.

அன்றைய தினசரியில் தன் படத்தைப்போட்டு ‘ 2018 முதல் காணவில்லை’ என்று வந்திருந்த அந்த விளம்பரத்தை படித்த இளங்கோ விக்கி விக்கி அழுதான்.

அதில் அவனின் தங்கை எழுதியிருந்த வாசகம் கீழே..

‘ அண்ணா, நமது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள்.நீயே நம் வீட்டையும் நிலத்தையும் வைத்துக்கொள்.

இந்த விளம்பரத்தைக் கண்டதும் என்னை பார்க்க தயவு செய்து அம்பத்தூருக்கு வா. அண்ணா! ப்ளீஸ்!

இப்படிக்கு,

உன் அன்புத்தங்கை

ஹேமா

செல்: 96……932 ‘

“அடக்கடவுளே..அம்மா..அப்பா.!நீங்க ரெண்டு பேருமே இறந்திட்டீங்களா…ஹேமா…

இதோ..அண்ணன் வரேன்மா..!”

வாய்விட்டு சொல்லியபடி அழுது கொண்டே தனக்கு மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் தங்க இடமும் உணவும்,தன் மளிகைக்கடையில் வேலையும் கொடுத்து ஆதரித்து வந்த தமிழகத்தை சேர்ந்த முதலாளியிடம் ஓடினான்.

விளம்பரத்தை காண்பித்து ‘தான் அனாதை இல்லை’ என்ற உண்மையை சொல்லி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். தான் உடனே தன் தங்கையை பார்க்க சென்னை செல்ல வேண்டும் என்றும் கூறினான்.

முதலில் அதிர்ச்சியடைந்த அந்த முதலாளி, அவனை திருப்பி அனுப்ப மனம் வராமல் புலம்பினார்.

பின்பு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு

இளங்கோவிற்கு நிறைய புத்திமதிகள் சொல்லி ஒரு பெரிய தொகையை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தார்.

இளங்கோ மீண்டும் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பெங்களூர் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டான்.

அவன் ஏறிய ரயில் சென்னையை நோக்கி புறப்பட்டது.

மூன்று வருடங்களுக்கு முன்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த இளங்கோ, தன் நண்பர்களுடன் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்த ஒரு பெண்ணை கலாட்டா செய்ய போய், அந்த பெண் தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி இளங்கோவை அடித்து விட்டாள்.

பதிலுக்கு அவளை அவமானப்படுத்த அவளின் தலை மயிரைப்பிடித்து இழுத்து, கட்டி அணைத்து அவள் உதட்டில் தன் உதட்டால்

முத்தம் கொடுத்து விட்டான்.

அதை எதேச்சையாய் பார்த்து

திகிலடைந்த ஒரு கல்லூரி பேராசிரியர், இளங்கோவை நெருங்கி வந்து, ‘ பளார் பளார்’ என்று அறைந்து விட்டார்.

இதை அவமானமாக கருதிய இளங்கோ, சட்டென்று முன் யோசனை செய்யாமல் ஆத்திரத்தில் பதிலுக்கு அந்த

ஆசிரியரை திருப்பி அடித்து விட்டான்.

விளைவு..?

புகாராக கல்லூரி முதல்வருக்கு செல்ல டிஸ்மிஸ்

ஆனான் இளங்கோ.

அப்பா சந்திரவேல், இளங்கோவை தன் பெல்ட்டால் அடித்து விளாசி,” வீட்டை விட்டு போயிடு! உன்னால் நான் வெளியில தலைகாட்ட முடியலை!” என்று கத்தினார்.

” அப்படின்னா எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சுக்கொடுங்க போயிடறேன்!”என்று இவன் பதிலுக்கு கத்தினான்.

” என் சொத்துல ஒரு சல்லிக்காசும் உனக்கு கிடையாது.எல்லாம் ஹேமாவுக்குத்தான்! ஓடிப்போயிடு! நான் செத்தா கூட என்னைப்பார்க்க நீ இந்த வீட்டு வாசற்படியை மிதிக்கக்கூடாது” என்று பெல்ட்டை எடுத்துக்கொண்டு அவனை துரத்தினார்.

பதிலுக்கு அவனும், ” நான் செத்தாலும் இந்த வீட்டை மிதிக்க மாட்டேன்!” என்று கத்திவிட்டு சென்னை சென்ட்ரலுக்கு வந்து பெங்களூர் வண்டியில் ஏறினான்.

சென்னை.

அம்பத்தூர்.

இளங்கோவின் வீடு.

இளங்கோவின் அப்பா சந்திரவேலுவும் அம்மாவும் ஹால் சோபாவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அருகில் மகள் ஹேமாவும் அமர்ந்திருந்தாள்.

” நாம உயிரோட குத்துக்கல்லாட்ட இருக்கும் போது, ஏங்க நம்ம பையனோட

படத்தை பேப்பர்ல போட்டு ஹேமா கொடுக்கிற மாதிரி

‘ காணவில்லை’ னு ஆங்கில பத்திரிக்கைல தமிழ்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க?”

” அவன் தமிழ்நாட்டுல தான் இருக்கானானு நமக்கு தெரியாதே.அதனாலதான். முதல்ல நீ இறந்த மாதிரியும் நான் விளம்பரம் கொடுத்து அவனை கூப்பிடற மாதிரியும்

விளம்பரம் செய்து பார்த்தேன்.

இளங்கோ வரலை.அப்புறம் நான் இறந்து நீ அவனை கூப்பிடற மாதிரி விளம்பரம் கொடுத்துப் பார்த்தேன்.

அப்பவும் வரலை. அதான் இந்த முறை நாம ரெண்டு பேரும் இறந்து இப்ப ஹேமா கொடுத்த மாதிரி விளம்பரம்

கொடுத்திருக்கேன்” என்று மனைவிக்கு பதில் சொன்ன சந்திரவேல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

” என்ன இருந்தாலும் நான் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன்.அதான் அவனுக்கு மனசு மாறலை போல இருக்கு.எனக்கு இப்ப என்ன சந்தேகம்னா…இந்த விளம்பரங்களை பார்க்க அவன் உயிரோடு தான் இருக்கானானு தெரியல.அதான்…”

அப்போது செல்போன் ஒலித்தது.ஹேமா எடுத்தாள்.

போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

” ஹலோ…ஹேமாவா…? …தங்கச்சி நான் உன் அண்ணன் இளங்கோ பேசறேன்” என்று குரல் ஒலித்தது.கூடவே ரயிலின்

‘ தடக் தடக் ‘

என்ற ஓசையும் கேட்டது.

மூவருக்கும் அது காதில் தேனாய் நுழைந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *