2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
வேலூர், ஜன. 4–
கதிர் ஆனந்த் எம்.பி.க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்றிரவு கிங்ஸ்டன் கல்லூரியில் கைப்பற்றப்பட்ட பணத்தை வெள்ளை வேனில் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் உள்ளது. அதே வீட்டில் தான் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தனும் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை 8.55 மணியளவில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர்.ஆனால், வீட்டில் அமைச்சரும், கதிர் ஆனந்த் என யாரும் இல்லாத நிலையில், பணியாட்கள் மட்டும் இருந்தால் ஆள் இல்லாத வீட்டில் எப்படி சோதனை நடத்துவது எனக் கூறி வீட்டின் வெளியே நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, எம்.பி கதிர் ஆனந்தை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
11 மணி நேர சோதனை
அதனைத் தொடர்ந்து, அவரிடம் ஒப்புதல் கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக பெற்று, கதிர் ஆனந்த் எம்.பி, அறிவுறுத்தலின்படி துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, வக்கீல் பாலாஜி ஆகியோரிடம் சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர். அதையடுத்து காலையிலிருந்து காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்குப் பிறகு மதியம் 2.30 மணியளவில் சோதனையைத் துவக்கினர். அந்த வகையில், அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை நடந்து வந்தது. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வீட்டில் பல்வேறு பகுதிகளில் சிறிது சிறியதாக வைத்திருந்த மொத்தம் ரூ.8 லட்சம் பணம் இருந்தது. துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, கதிர் ஆனந்த் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்து வருவதுடன் ஒரு நபர் ரூ.2 லட்சம் அளவுக்கு கையிருப்பு தொகையாக வைத்திருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறையினர் அந்தப் பணத்தை கைப்பற்றாமல் அந்த இடத்திலே வைத்துவிட்டனர்.
2 கதவுகளின் பூட்டுகள்
சுத்தியலால் உடைப்பு
இந்த சோதனையில் அமைச்சரின் அறை மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியின் அறை மட்டும் பூட்டியிருந்தது. அதன் மாற்று சாவி இல்லாத நிலையில் இரண்டு அறைகளை சோதனை செய்தே தீர வேண்டும் என அதிகாரிகள் பிடிவாதம் காட்டினர். பின்னர், அறையின் கதவை உடைத்தாவது திறக்க வேண்டும் என கூறியதால் அந்த தகவலை சோதனையின்போது உடனிருந்த திமுக பிரமுகர்கள் அமைச்சரிடன் தெரிவித்துள்ளனர். வேறு வழியில்லாத நிலையில் அமைச்சரின் அனுமதிக்கு பிறகு அந்த இரண்டு அறைகளின் பூட்டையும் முருகன் என்பவரது உதவியுடன் உளி, சுத்தியலை பயன்படுத்தி உடைத்தனர். இரண்டு அறைகளின் சோதனை முடிந்த இரண்டு மணி நேரம் கழித்தே அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சரின் வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றனர்.
போலீஸ் பாதுகாப்புடன்
சென்ற வெள்ளை வேன்
கிங்ஸ்டன் பொறியில் கல்லூரியில் நடைபெற்ற சோதனையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரகளுக்கு உதவியாக வெள்ளை வேனில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்துடன் துப்பாக்கி ஏந்திய வங்கி பாதுகாவலர்களுடன் வந்தனர். இந்த வாகனம் மீண்டும் பாதுகாப்புடன் நள்ளிரவு அங்கிருந்து சென்றது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி என்பதால் பணம் இருந்தது. அந்த பணத்தை வங்கி அதிகாரிகள் உதவியுடன் சரிபார்த்து எஸ்பிஐ வங்கியில் உள்ள அமலாக்கத்துறையின் கணக்கில் வரவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது
அந்த பணத்துக்கு நிர்வாக தரப்பில் கணக்கு காட்டிவிட்டு திரும்பப் பெறலாம் என்பதால் அந்த பணம் குறித்த விவரம் வெளியிடவில்லை.
காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனிலும் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் வீட்டில் நடந்த சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியானது. அதேபோல், சிமெண்ட் குடோனில் சிமார் 11 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை நிறைவில் ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.இதற்கிடையே, எம்.பி கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கேயும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிங்ஸ் கல்லூரியில்
2வது நாளாக சோதனை
இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காகப் போடப்பட்டுள்ளனர். வளாகத்திற்குள்ளே செல்கின்ற பணியாளர்களைக் கூட சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும், கேண்டினுக்காக கொண்டு செல்லப்படுகின்ற உணவுப்பொருள் மற்றும் பால் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.