சினிமா

‘காட்டுக்கு ஓடிப்போய் வாழ்ந்து சாகலாமா யோசனை வருகிறது’: பாரதிராஜா வேதனைப் பேச்சு

சென்னை, செப் 10–

‘‘கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது’’ என்று பிரபல டைரக்டர் பாரதிராஜா வேதனையோடு கூறினார்.

கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு ‘மரகதக்காடு’ படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் (என் சிஷ்யன்) இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினார்.

கமஹாசன் – ஜெயசித்ரா நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் (ரகுநாதனின் மகன்) ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, “இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.

‘இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது’ என்றும் கூறினார்..

எங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான் என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும் என்றார்.

கேயார்

முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும் இயக்குனருமான கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர், அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

கவிஞர் வெண்ணிலா

கவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பன் இயக்குனர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குனர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது” என்றார்.

வந்திருந்தவர்களை ஜான் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *