சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக ஏற்பாடு
சென்னை, நவ.1–
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட கடந்த 28–ந்தேதியே பயணம் செய்ய தொடங்கிவிட்டார்கள்.
சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் பஸ்கள், ரெயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 11,176 பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,910 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களில் பயணிகள் ஏறி தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோல சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட ரெயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகள் அனைத்து நிரம்பியதால், முன்பதிவில்லாத பெட்டியில் நிற்கக்கூட இடமில்லாமல் நெரிசலில் நின்றபடி மக்கள் சொந்த பயணித்தனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூர், செங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப ஏதுவாக நாளை (2ந் தேதி) முதல் 4ந்தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்கள் என 9,441 பஸ்கள் மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து 2 நாட்களில் 4 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது தவிர அரசு பஸ்களிலும் லட்சக்கணக்கானவர்கள் சென்று இருப்பதால் 4-ந் தேதி அதிகாலையில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தென் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
அந்த வகையில் காட்டாங்கொளத்தூர்–தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும். 4.30 மணி, 5 மணி, 5.45 மணி 6.20 மணிக்கு காட்டாங்கொளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இருந்து மின்சார ரெயில் நின்று செல்லும்.
இதே போல தாம்பரத்தில் அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரெயில் காட்டாங்கொளத்தூருக்கு இயக்கப்பட உள்ளது.