செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : கலெக்டர் பொன்னையா கொடியசைத்து துவக்கினார்

காஞ்சீபுரம்,பிப்.10-

காஞ்சீபுரத்தில் இந்திய தேர்தல் ஆணைய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பா.பொன்னையா, மின்னனு வாக்குப்பதிவு யந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி அடங்கிய விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை துவக்கி வைத்தார்

மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 7 வாகனங்கள் வீதம் 77 வாகனங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு அதாவது 13ம் தேதி வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சார முகாம்கள் நடைபெறும்.

ஒரு வாகனத்தில் 4 அலுவலர்களும் மற்றும் ஒரு காவலரும் பணியில் இருப்பர். தினசரி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் பொதுமக்கள் கூடுமிடத்திலும், வாக்குச்சாவடி மையங்களிலும், அரசு பொது கட்டிட வளாகங்களிலும் இக்குழுவினர் கருவியைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள்.

அனைத்து வாக்கு மையங்களிலும் முதல் முறையாக செயல்பாட்டுக்கு வரும் கருவியின் விளக்க நிகழ்ச்சியான இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மாதிரி வாக்குப்பதிவினை செய்து வாக்காளர் தாம் அளித்த வாக்கினை மாதிரி வாக்குப்பதிவு மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இந்த கருவியில் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை 7 நொடிகள் நேரத்தில் நேரடியாக பார்வையிடலாம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் தாசில்தார் காஞ்சனமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *