செய்திகள்

காஞ்சீபுரம் சரகத்தில் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை: புதிய டிஐஜி சாமுண்டீஸ்வரி பேட்டி

காஞ்சீபுரம், ஜூலை 3–

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பா.சாமுண்டீஸ்வரி, காஞ்சீபுரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சீபுரம் சரகத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரவுடிகளும் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் குற்றம் சார்ந்த தகவல்களையும் தேவையான உதவிகளையும் கேட்டுப் பெறுவதற்காக இரண்டு சிறப்பு தொலைபேசி எண்கள் 7397001493, 7397001398 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் 3 மாவட்டங்களிலும் காவல் மாணவர் படை, போலீஸ் நண்பர்கள் குழு ஆகியன விரிவுபடுத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் தவறான வழியில் செல்வது தடுக்கப்படும். மூன்று மாவட்டங்களிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது முடக்கம் காரணமாக திருமணம், இறுதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டம் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் காஞ்சீபுரத்தில் 31 பேர், செங்கல்பட்டில் 20 பேர், திருவள்ளூரில் 23 பேர் என மொத்தம் 3 மாவட்டங்களில் 74 பேர் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கின் போது விதிகளை மீறியதாக 85,758 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 71,206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஞ்சீபுரத்தில் இவருக்கு முன்னர் காஞ்சீபுரம் டிஐஜி ஆக இருந்த பி.சி.தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *