செய்திகள்

காஞ்சீபுரத்தில் 15 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்கள் கைது

காஞ்சீபுரம், ஏப். 3–-

காஞ்சீபுரத்தில் 15 வயது ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் விசாலாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 30ம் தேதி விசாலாட்சி சின்ன காஞ்சீபுரத்தில் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு மர்ம கும்பல் அந்த பெண்ணை மிரட்டி ஆட்டோவில் கடத்திச் சென்றது. பிறகு அந்த கும்பல் காஞ்சீபுரத்தில் ஒரு மறைவான இடத்திற்கு அந்த இளம்பெண்ணை அழைத்து சென்று ஒருவர் பின் ஒருவராக கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை வினோத் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி உத்திரவின் பேரில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் மற்றும் போலீசார் அந்த இளம்பெண்ணையும், அந்த மர்ம கும்பலையும், காஞ்சீபுரம் நகரில் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது, ஒரு ஆட்டோவில் ஒரு பெண்ணை சில பேர் கடத்திக் கொண்டிருப்பது அந்த கேமராவில் தெரியவந்தது. அந்த ஆட்டோ நம்பரை வைத்துகொண்டு, மர்ம கும்பலை போலீசார் தேடினர்.

இதற்கிடையில், கற்பழிக்கப்பட்ட இளம்பெண் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அலங்கோலமான நிலையில் அந்த இளம்பெண் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இதற்கிடையில், அந்த இளம்பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் காஞ்சீபுரம் திருக்காலிமேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (25), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவா (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவைபறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தினேஷ் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ராஜா, தேவா ஆகியோர் காஞ்சீபுரத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதையொட்டி அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *