செய்திகள்

காஞ்சீபுரத்தில் எளிமையான முறையில் வீட்டில் நடந்த 3 திருமணங்கள்

Spread the love

காஞ்சீபுரம்,மார்ச் 30 –

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையை யொட்டி, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணங்கள் ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி காஞ்சீபுரத்தில் 3 வீடுகளில் திருமணங்கள் நடைபெற்றது.

காஞ்சீபுரம் நாராயணபாளையத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகள் ஷண்முகபிரியா, இவருக்கும், புதுப்பேட்டை பண்ருட்டியை சேர்ந்த அண்ணாமலையின் மகன் பிரச்சன்னா என்பவருக்கும் திருமணம் இன்று காஞ்சீபுரம் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி, பொதுமக்கள் வெளியில் கூடுவதையும், செல்வதையும் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. அதையொட்டி திருமண வீட்டார், திருமணத்தை காஞ்சீபுரத்தில் உள்ள மணமகள் வீட்டிலேயே எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.

இதனையொட்டி வீட்டில் அலங்கார தோரணங்கள் அமைக்கப் பட்டு, மணமக்கள் மணக்கோலத்தில் தயாராகினர். பிறகு மணமகன், மணமகள் இருவரும் கைகளை கிருமிநாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தம் செய்து, முக கவசம் அணிந்தபடி, மணமேடையில் வந்து அமர்ந்தனர். பிறகு பாரம்பரிய முறைப்படி கெட்டி மேளம் ஒலிக்க, மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். உறவினர்கள் அனைவரும் மலர்தூவி வாழ்த்தினர்.

ஊரடங்கு உத்தரவினால், திருமண விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 15 பேர் மட்டுமே மணமக்களை வாழ்த்தினர். அவர்களை வாசலிலேயே பன்னீர் தெளித்து வரவேற்றனர். மேலும் வீட்டிற்குள் வந்த அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் மற்ற 2 திருமணங்கள் பாரம்பரிய முறைப்படி காஞ்சீபுரத்தில் உள்ள வீட்டிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *