போஸ்டர் செய்தி

காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு

லக்னோ,மே.27–

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு இன்று வாரணாசி தொகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந் தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார். இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார். பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.

வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.

மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்.

மோடி வருகையை முன்னிட்டு அங்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணியளவில் மோடி வாராணாசி வந்தார். அவரை கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் வரவேற்றனர்.

மோடி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன் கைப்பட அபிஷேகம் செய்த அவர் தீபாராதனையும் காட்டி பயபக்தியுடன் வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மையத்துக்கு சென்ற மோடி அங்கு பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசினார். பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமரை வரவேற்று வாரணாசி முழுவதும் வீதியோரங்களில் காவி பலூன்கள் தொங்க விடப்பட்டிருந்தன. மேலும் மோடி கட்அவுட், மலர் அலங்காரம் என வாரணாசியில் தொண்டர்கள் அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

காசி விஸ்வநாதர் கோவில் வாசலில் மெகா டிஜிட்டல் ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது. வாராணாசியில் பல்வேறு இசைகலைஞர்கள் குவிந்திருந்தனர். மேள தாளங்களுடன் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினர். ராமர், அனுமான் என பல்வேறு தெய்வங்களின் மாறு வேடங்களில் கலைஞர்கள் மோடியை வரவேற்றார்கள்.

வாரணாசி விழாக்கோலம் பூண்டிருந்தது. மோடி சென்ற வழியெங்கும் சாலையின் இருபக்கமும், பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டிருந்து மலர் தூவி எழுச்சி வரவேற்பு அளித்தனர்.

வாரணாசியில் 2வது முறை போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 ஓட்டுக்கள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 4 லட்சத்து 80 ஆயிரம் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். இது கடந்த 2014ஐ விட கூடுதல் வித்தியாசம் ஆகும்.

மக்களவை தேர்தல் முடிந்த மறுநாள் மோடி கேதார்நாத் சென்று தியானத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தனது வெற்றியை முதன்முதலாக தாயிடம் தெரிவித்து நேற்று ஆசி பெற்றார். இன்று மோடி முதல் நிகழ்ச்சியாக காசி விஸ்வநாதரை தரிசித்தார். தொடர்ந்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *