கவர்னர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்
சென்னை, பிப். 14–
சென்னையிலிருந்து காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் சிறப்பு ரெயிலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் மூன்றாம் கட்ட நிகழ்வுகள், வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாச்சார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாகக் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,080 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை ஐ.ஐ.டி. ஒருங்கிணைத்துச் செயல்படுத்துகிறது. தமிழகத்திலிருந்து பிரத்தியேகமாக 5 ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரண்டு ரயில்கள், கன்னியாகுமரியிலிருந்து இரண்டு ரயில்கள் மற்றும் கோவையிலிருந்து ஒரு ரயில் என இரு மார்க்கத்திலும் மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 212 பக்தர்களுடன் பனாரஸ்-க்கு புறப்பட்ட முதல் சிறப்பு ரெயிலைத் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மற்றொரு ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பனாரஸுக்கு 19-ம் தேதியும் (06153), மறுமார்க்கத்தில் பனாரஸில் இருந்து சென்னைக்கு (06154) 24-ம் தேதியும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி – பனாரஸ் இடையே சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து பனாரஸுக்கு (06163) 17-ம் தேதியும் மறுமார்க்கத்தில், பனாரஸில் இருந்து கன்னியாகுமரிக்கு 23-ம் தேதியும் இயக்கப்படும். கோவை – பனாரஸ் இடையே சிறப்பு ரயில் (06187) 16-ம் தேதியும் மறுமார்க்கத்தில் பனாரஸில் இருந்து (06188) 22-ம் தேதியும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி மற்றும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யன், தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
![]()





