செய்திகள்

காசிமேடு துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்: நிதி அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக. 13–

காசிமேடு மீன்பிடி துறைமுகம் 150 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:–

* சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 2021–22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க மொத்தம் 433.97 கோடி ரூபாயும், மீன் இறங்கு தளங்களை மேம்படுத்த 143.46 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடும் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.

பருவநிலை மாற்ற இயக்கம்

* பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, முதலமைச்சரின் தலைமையின் கீழ், இந்த அரசு மொத்தம் 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அமைக்கும்.

* ஆளில்லா விமானங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் மேலாண்மை அமைப்புகள், நவீன ஆயுதங்கள் மற்றும் வன நிலப்பரப்பிற்கேற்ற வாகனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் அடுத்த 5 ஆண்டுகளில், சர்வதேச நீலக் கொடி சான்றிதழை பெறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

* ‘நீலக்கொடி சான்றிதழ்’ இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்.

சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்

* இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்.

* தமிழ்நாட்டிலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்தவும், அதன் இயற்கை சூழலை மீளுருவாக்கவும், முதலமைச்சரின் தலைமையின்கீழ், “தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்” ஒன்றினை இந்த அரசு ஏற்படுத்தும். இந்த இயக்கம் ஐந்து ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிந்து, அவற்றின் இயற்கை சூழலை மீள உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும். இதனால் அவற்றை சார்ந்தோரின் வாழ்வாதாரம் உயரும். இதற்கென 150 கோடி ரூபாய் நிதி ஐந்தாண்டுகளுக்கு செலவிடப்படும்.

கட்டுமானத் தொழில்நுட்பங்கள்

* சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றத்திற்கும், ஏற்ற கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கு மாறுவது மிகவும் அவசியமாகும். கட்டுமானச் சவால்களை எதிர்கொள்வதற்காக கட்டட தகவல் மாதிரியாக்கம், புதுமையான விரைவு கட்டுமானத் தொழில்நுட்பம், தானியங்கு தொழில்நுட்பம், நீடித்து நிலை நிற்கும் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆகியவற்றை செயல்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

* திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் இவையனைத்தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *