ஜெருசலேம், ஏப். 14–
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அல் – அஹ்லி மருத்துவமனை சேதம் அடைந்ததில் நோயாளி ஒருவர் பலியானார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1 ந்தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது.
இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19 ந்தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனை மீது தாக்குதல்
இந்நிலையில், நேற்று காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் 2 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல் குறித்து பாலஸ்தீன சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலில், ராணுவம் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து அனைவரையும் வெளியேற்றவும் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியிலேயே இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் துவங்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தத் தாக்குதலில், மருத்துவமனையின் வரவேற்பு பகுதியும், அவசரப் பிரிவு பகுதியும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நோயாளிகளை வெளியேற்றும்போது, அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு நோயாளி பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.