செய்திகள்

காசா மக்களை உள்ளே விடாமல் கத்தார், ஜோர்டான், எகிப்து நாடுகள் எல்லைகளை மூடியது ஏன்?

குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி

வாஷிங்டன், அக்.16–

காசாவிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் துடிக்கும் சூழலில் அரபு நாடுகளான கத்தார், ஜோர்டான், லெபனான், எகிப்து ஏன் எல்லைகளை மூடிவைத்திருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே இன்று 10வது நாளாக போர் நடக்கிறது. இதுவரை காசாவில் 2700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய விரும்புகின்றர். இந்த வேளையில் பாலஸ்தீன மக்கள் மீது நாம் அக்கறை கொள்ள வேண்டும். அவர்கள் அப்பாவிகள். இந்தப் போரை அவர்கள் விரும்பவில்லை.

ஆனால், அவர்கள் வேதனையில் உள்ளபோது அரபு நாடுகள் என்ன செய்கின்றன? உதவிக்கு வராமல் அவை எங்கே இருக்கின்றன? கத்தார், லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகள் எங்கே போய்விட்டன. எகிப்துக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர் நிதியுதவி செய்கிறது. ஆனாலும்கூட அவர்கள் ஏன் பாலஸ்தீனியர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

எகிப்து ஏன் பாலஸ்தீனியர்களை மறுக்கிறது என்றால் அவர்களுக்கு இவ்விவகாரத்தில் நுண்ணிய முடிவை எடுக்க இயலவில்லை. தங்கள் அருகில் ஹமாஸ் இருப்பதில் எகிப்துக்கு விருப்பமில்லை. அப்படியிருக்கையில் இஸ்ரேல் மட்டும் எப்படி ஹமாஸ் தங்கள் அருகில் இருப்பதை விரும்பும். நாம் இவ்விவகாரத்தை நேர்மையுடன் அணுகுவோம்.

எகிப்து மட்டுமல்ல எந்த அரபு நாடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவவில்லை. ஏனெனில் அவர்களுக்கு யார் சரி, யார் தவறு, எது நல்லது, எது கெட்டது எனத் தெரியவில்லை” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *