வாஷிங்டன், செப் 23
காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பாலஸ்தீன அதிபரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
‘குவாட்’ உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் ஒரு பகுதியாக டெலாவார் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவாார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.ஷ்ரமா ஓலி, குவைத் இளவரசர் ஷேக் சபா காலிட் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும். காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. காசா- – இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுடன் நீண்ட கால நட்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல்–-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, இரு நாடுகள் தீர்வு காண இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அதே நேரத்தில், காசாவின் மோசமான நிலைமை குறித்து இந்தியா மீண்டும் மீண்டும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.