செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து; இஸ்ரேல் சென்றார் அதிபர் டிரம்ப்

Makkal Kural Official

போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என பேட்டி

வாஷிங்டன், அக். 13–

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக, போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.

காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி இரு தரப்பும் இன்று (திங்கட்கிழமை) பணயக்கைதிகளை விடுவிக்கின்றனர். ஹமாஸ் வசமிருக்கும் இஸ்ரேலை சேர்ந்த 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது. அவர்கள் இன்று விடுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் இஸ்ரேல் பிடியில் உள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. அத்துடன் போரினால் நிலைகுலைந்துள்ள காசாவுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதற்காக 5 எல்லைகளை இஸ்ரேல் திறக்கும். போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க சுமார் 200 அமெரிக்க வீரர்கள் காசாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் எகிப்து, கத்தார், துருக்கி, அமீரகத்தின் வீரர்களும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

காசாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போடப்படுகிறது. எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் அமைதி உச்சி மாநாடு நடக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மற்றும் 20-க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் எகிப்து அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் இந்தியா சார்பில் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு எகிப்து செல்வதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டு சென்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. அனைவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இப்போது முதல் முறையாக, அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமையளிக்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

இது நான் முடித்து வைக்கும் 8வது போராகும். தற்போது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானுக்கு இடையே ஒரு மோதல் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். ஏனெனில் நான் இப்போது மற்றொன்றைச் செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் போர்களைத் தீர்ப்பதில் நான் சிறப்பானவன்.

ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த ஒவ்வொரு மோதல்களையும், பெரும்பாலும் ஒரே நாளில், நான் தீர்த்துவைத்தேன். இது மிகவும் நல்லது. நோபல் பரிசுக்காக நான் இதைச் செய்யவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இதைச் செய்தேன்.

இந்தியா–பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட பல போர்களை நான் வரி விதிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்த்தேன். இருவர் மீதும் 100 சதவீதம், 150 சதவீதம், 200 சதவீதம் போன்ற வரை வரி விதிப்பேன்,’ என்றேன். இதனால், அந்தப் பிரச்னை 24 மணிநேரத்தில் தீர்த்து வைக்கப்பட்டது.

காசா போர் முடிந்துவிட்டது, அது அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டார். காசா பகுதியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, “அது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நினைக்கிறேன்” என்றார்.

இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

இதற்கிடையே காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுமா? என்பது பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகளை ஹமாஸ் தரப்பு ஏற்க மறுத்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *