செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம் கோரி ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன், மார்ச் 26–

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்த கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் போரால் இதுவரை 32,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் கொண்டு வருமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் இல்லாத 10 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அமெரிக்கா புறக்கணிப்பு

இதற்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்க அமெரிக்கா வாக்களிப்பை புறக்கணித்தது. போர் நிறுத்தக்கோரி இதற்கு முன் கொண்டுவந்த 4 தீர்மானங்களை வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்த அமெரிக்கா இம்முறை அதை பயன்படுத்தவில்லை. இதனால் போர் நிறுத்த தீர்மானம் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். போர்நிறுத்த தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், இல்லையெனில் மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும் என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த தீர்மானத்தை பாலஸ்தீனம் வரவேற்றுள்ள நிலையில் இதனை ஏற்க போவது இல்லை என இஸ்ரேல் கூறி இருக்கிறது. காசாவில் தாக்குதலை நிறுத்த போவதில்லை எனவும் அறிவுறுத்தியுள்ளது.

பிணை கைதிகள் விடுதலை குறித்து ஏதும் வெளியிடாத இந்த தீர்மானத்தை, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தடுக்காததற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனுக்கு இன்று செல்ல இருந்த உயர்நிலை குழுவின் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *