சென்னை, மார்ச் 26–
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கமல்ஹாசன் மறுத்து விட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. –- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைகூட கமல்ஹாசனுக்கு கொடுக்க முன்வரவில்லை.
காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போதே கமல்ஹாசனுக்கும் சேர்த்து தொகுதிகளை பேசி இருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இழு பறிக்கு பிறகு கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மறுத்து உள்ளார்.
காங்கிரசுக்கு மறுப்பு
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
வருகிற 29–-ந்தேதி கமல்ஹாசன் தனது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஈரோடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அன்று பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் மறுநாள் (30-ந்தேதி) சேலத்திலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஏப்ரல் 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் 3-ந்தேதி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் பிரச்சாரம் செய்கிறார். அன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பேசும் அவர் மறுநாளும் (7-ந் தேதி) சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலேயே பிரசாரம் செய்கிறார்.
இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மதுரையில் 10-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல் 11-ந் தேதி தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ஏப்ரல் 14-ந்தேதி திருப்பூரிலும், 15-ந்தேதி கோவையிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார்.
இறுதி நாளான ஏப்ரல் 16-ந்தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல்ஹாசன் அத்துடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.
11 நாள் பிரச்சாரம்
பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்கள். தற்போது அவர்களது தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசன் தனது சுற்றுபயண திட்டத்தை வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 11 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்யும் வகையில் அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.