கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
திருவனந்தபுரம், ஜூன் 12–
கேரளாவில் காங்கிரஸ் வென்றது குறித்து எங்களுக்கு கவலை இல்லை மாறாக, பாஜக ஒரு தொகுதியில் வென்றதுதான் வேதனை தருகிறது என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று முந்தினம் கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று 2 வது நாள் சட்டசபை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் சி.பி.எம் கூட்டணி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது.
அதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “தேர்தல் தோல்விக்காக ராஜினாமா செய்யவேண்டும் எனக் கூறிக்கொண்டு யாரும் வரவேண்டாம். 1980-ல் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வென்றது. அது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
பாஜகதான் வேதனை
காங்கிரஸ் முதலமைச்சர் ஏ.கே.ஆண்டனி 2004-ல் ராஜினாமா செய்தது தேர்தலில் சீட் குறைந்ததால் அல்ல. காங்கிரஸில் அமைப்பு ரீதியாக ஏற்பட்ட பிரச்னைதான் காரணம். சி.பி.எம் கூட்டணிக்கு எதிராக மக்கள் செயல்பட்டதாக நினைக்க வேண்டாம். மோடியை மாற்ற வேண்டும் என கேரள மக்கள் நினைத்தனர். அதற்காக காங்கிரஸ் கூட்டணியை மாற்றாக நினைத்தனர். தேர்தல் முடிவு இடது ஜனநாயக முன்னணி-க்கு எதிரானது என நீங்கள் கருதக்கூடாது.
நீங்கள் (காங்கிரஸ்) வாக்கு வாங்கியதிலோ, நீங்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றதிலோ எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை. அதில் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் பா.ஜ.க வென்றது தான் வேதனையாக உள்ளது. நாங்களும், நீங்களும் சிந்திக்க வேண்டிய விஷயம் பா.ஜ.க ஒரு தொகுதியில் வென்றது எப்படி என்பதைப்பற்றிதான்.
வெற்றி கிடைத்து விட்டது என அதிக அகங்காரம் கொள்ள வேண்டாம். பல இடங்களிலும் உங்களுக்கு ஆதரவளித்த சக்திகள் (சிறுபான்மையினர்) திருச்சூரில் உங்களுடன் நிற்கவில்லை. தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். நாங்கள் எப்போதும் மக்களுடன் இருப்போம். இது இறுதி தோல்வி அல்ல” என்று பினராயி விஜயன் கூறினார்.