செய்திகள்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு வாங்கப்படும்

ராஜஸ்தான் முதலமைச்சர் வாக்குறுதி

ஜெய்ப்பூர், அக்.28-

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு வாங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்தார்.

ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே மக்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை முதலமைச்சர் அசோக் கெலாட் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து மேலும் 5 வாக்குறுதிகளை நேற்று அவர் வெளியிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், கோதான் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணம் கிலோ ரூ.2-க்கு வாங்கப்படும்.

தேசிய பேரிடர் இழப்புகளுக்காக ரூ.15 லட்சம் காப்பீடு வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும்.

பள்ளிக்கல்வி ஆங்கில வழியில் நடத்தப்படும். அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு முதல் ஆண்டிலேயே லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.

மாநில சட்டசபை தேர்தலுக்கான காங்கிரசின் தேர்தல் அறிக்கை வருகிற நாட்களில் வெளியிடப்படும். அதில் மேலும் அறிவிப்புகள் இடம்பெறும்.

பிரதமர் மோடியே எங்கள் வாக்குறுதிகளைத்தான் பின்பற்றுகிறார்.

மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறது. நாட்டில் நாய்களை விட அமலாக்கத்துறை அதிகாரிகள்தான் அதிகமாக அலைகிறார்கள் என ஒரு முதலமைச்சர் (பூபேஷ் பாகேல்) சொல்கிறார். இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்?

எவ்வளவு வலியுடன் இந்த கருத்தை அவர் கூறியிருப்பார் என்பதை நினைத்துப்பாருங்கள். விசாரணை அமைப்புகள் அரசியல் ஆயுதமாகி விட்டன. மோடி ஜி, உங்கள் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *