செய்திகள்

காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்டோபர் 17–-ந் தேதி தேர்தல்

காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி, ஆக.29-–

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலகினார். பின்னர், சோனியாகாந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். கட்சிக்கு முழுநேர தலைவர் உள்பட உட்கட்சி தேர்தலை நடத்துமாறு குலாம்நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியாகாந்தி, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலக முன்வந்தார். இருப்பினும், காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக்கொண்டதால் பதவியில் நீடித்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரிய கமிட்டி அறிவித்தது. வட்டார குழு, மாவட்ட தலைவர், மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல், இந்த ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான சரியான தேதியை முடிவு செய்ய காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியாகாந்தி, காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரும் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா, காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தலைவர் தேர்தலுக்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் கால அட்டவணைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கே.சி.வேணுகோபால் கூறினார்.

இதுகுறித்து காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.