செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

ஜெய்ப்பூர், செப். 23–

காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் சோனியா காந்தி மிக நீண்ட காலமாக இருந்து வந்தார். 2017 – 2019ல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2019ல் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் அப்போது பதவியிலிருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

இதற்கு முன் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் சோனியாவை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது 22 ஆண்டுகளுக்குப் பின் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து முறைப்படியான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. நாளை முதல் 30–ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அக்டோபர் 1–ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற 8–ந்தேதி கடைசி நாளாகும். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால் 17–ந்தேதி தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் 19–ந்தேதி வெளியிடப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகிகள் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.

ராகுல் நிராகரிப்பு

முன்னாள் தலைவர் ராகுலை தலைவர் பதவியை ஏற்கும்படி மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை அவர் நிராகரித்துள்ளார். தன் குடும்பத்தினர் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘ஜி – 23’ எனப்படும் அதிருப்தி குழுவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோனியாவையும் அவர் சந்தித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்தார். அதன் பின்னர் கேரளாவில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை பயணத்தில் கெலாட் பங்கேற்றுள்ளார்.இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன். தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்தினருக்கு ஆசையில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் வலிமையான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மேகன் மற்றும் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள். இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.

அசோக் கெலாட் தவிர சசிதரூர், திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.