செய்திகள்

காங்கிரஸ் கூட்டணியில் 10 தி.மு.க. அமைச்சர்கள் கொலு பொம்மைகளாக இருந்தார்கள்

திருவள்ளூர் ஏப். 15–

மத்தியில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 தி.மு.க. அமைச்சர்கள் கொலுபொம்மைகளாக இருந்தனர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் பாரிவாக்கம் க.வைதியநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் பி வேணுகோபால், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் க.வைதியநாதன் ஆகியோர் வெற்றி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். வேணுகோபாலை மீண்டும் தேர்வு செய்தால் பணிகளை நிறைவேற்றுவதில் சிறப்பாக இருப்பார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இரண்டிலும் மக்களாகிய நீங்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதியாகவும் செயல்படுகிறீர்கள்.

கொலு பொம்மைகள்

தமிழகத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சி நடந்துள்ளது. யார் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தது என்று நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டும். மத்தியில் தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சியில் 10 அமைச்சர்கள் கொலு பொம்மையாக தான் இருந்தார்கள். தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானமாக செல்கிறது. ஆனால் 10 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த தி.மு.க. – காங்கிரஸ் உருப்படியாக ஏதும் செய்யவில்லை. நிதி வந்து சேரவில்லை என்று மக்களை ஏமாற்றலாம் என மீண்டும் கூட்டணி அமைத்து வந்துள்ளார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 20 கிலோ இலவச அரிசி கொடுத்து உணவு பாதுகாப்பை உருவாக்கி உள்ளார். கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என தெரிவித்தார். இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 2023 க்குள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும், பேறுகால நிதி உதவி 12 ஆயிரத்தில் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் இறுதி தீர்ப்பை அரசு அணையாக பெறவில்லை, ஜெயலலிதா நீண்ட சட்டபோராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் தான் இறுதி தீர்ப்பு பெற்று தரப்பட்டு அரசானையாக வெளியிடப்பட்டது. காங்கிரஸ் – திமுக செயலற்ற அரசாக மத்தியில் இருந்தது.

இந்த நாடாளுமன்ற தேர்தலோடு அண்ணா தி.மு.க. காணாமல் போய் விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் முதல்வராக வர முடியாது.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர் உருவாக்கிய தொண்டர்கள் இயக்கம். சுனாமி, புயல், பூகம்பமே வந்தாலும் அண்ணா தி.மு.க.வை அசைக்கவே முடியாது. கருணாநிதியாலே முடியவில்லை. உங்களால் முடியவே முடியாது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெய்வமாக வானத்தில் இருந்து ஆட்சியை எப்படி நடத்துகிறோம் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதனால் நாங்கள் பயந்து போய் ஆட்சி நடத்துகிறோம்.ஜெயலலிதா திட்டங்களை கூடுதலாக நாட்டு மக்களுக்கு கொடுத்து வருகிறோம். ஸ்டாலின் கலர், கலராக சட்டை போட்டுக்கொண்டு வலம் வந்தார் டீ கடைக்கு சென்று டீ குடித்தார். ஆனால் நாம் டீக்கடையே நடத்தி உள்ளோம், ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முடியாது. 28 ஆண்டுகளாக அண்ணா தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. 28 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் இல்லை. மக்கள் இயக்கமாக மக்கள் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம். சேது சமுத்திர திட்டம் வீனான திட்டம் என்று ஜெயலலிதா கூறினார். அந்த பகுதியில் நகரும் தன்மை கொண்ட மணல் இருப்பதால் மீண்டும் மேடாகி விடும் கப்பல் செல்ல முடியாது என்று கூறினார். ஆனால் 40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டு விட்டார்கள். கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, லஞ்சம், ஊழல் அதிகரித்து இருந்தது. இதனால் அவர்களால் வர முடியாது. தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கும் மேகதாது அணையை கட்ட அனுமதி தருவோம் என்று ராகுல்காந்தி கர்நாடகாவில் பேசி உள்ளார். ராகுல்காந்தி பிரதமர் ஆக முடியாது என்றும் இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பிரச்சாரத்தின் போது ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், மற்றும் கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பி.பலராமன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் சிபி குமார், பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மாவட்ட செயலாளர் லோகநாதன் மற்றும் முரளி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.ஹரி, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் வி மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம், முன்னால் எம்.எல்.ஏ. இரா மணிமாறன், மாவட்ட பால்வள தலைவர் வேலன்சேரி சந்திரன் , மாவட்ட அவைத்தலைவர் தீபாகண்ணன், மாவட்ட பொருளாளர் செவ்வை பி ஜெயபால், துணை தலைவர்விஜயலட்சுமி ராமமூர்த்தி, கமேன்டோ எ.பாஸ்கர், சி.ஒய்..ஜாவித்அகமத், கே.எஸ் .ரவிச்சந்திரன், கே.ஜி.ட்டி.கௌதமன், ஒன்றிய செயலாளர்கள் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பி.ரவிச்சந்திரன், ஜி.திருநாவுக்கரசு, ஆர்.சந்திரசேகர். ,தேவேந்திரன், பிரகாஷ், பத்மநாபன் அந்தமான் முருகன், நட்ராஜ், ராகேஷ், பாமகவின் நகர செயலாளர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *