ஈரோடு, பிப். 8-
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ந் தேதி மரணம் அடைந்ததையடுத்து, அங்கு இடைத்தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ந் தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் பலர் வந்து ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் வரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால் பலர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வரிசையாக வேட்பு மனுக்களை அதிகாரிகள் பெற்றனர். 3 மணிக்கு பிறகு 26 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.
அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள்.
அண்ணா தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனும், அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அந்தந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. எனவே அவர்கள் 2 பேரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எனவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
அதிகாரிகளின் முன்னிலையில் ஒவ்வொரு வேட்பு மனுக்களும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. சரியாக பூர்த்தி செய்யப்பட்டு இருந்த வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகுதி இல்லாத மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.