உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்
டெல்லி, ஏப். 01–
காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்ட ரூ.3567 கோடி நோட்டீஸ் தொடர்பாக ஜூலை 24-ம் தேதி வரை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதனை பாரதீய ஜனதா கட்சி மாற்றி அமைத்துள்ளது. இதனால், 2017-18 முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு, வரி நிலுவை ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தற்போது 2014-15 ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.663 கோடி, 2015-16-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.664 கோடி, 2016-17-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.417 கோடி என மொத்தம் ரூ.1745 கோடி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.3,567 கோடி வரி நிலுவை செலுத்த வேண்டும் வருமான வரித் துறை கூறியுள்ளது.
ஜூலை 24 வரை நிறுத்திவைப்பு
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை வரி தீவிரவாதம் என்று காங்கிரஸ் விமர்சித்த நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, வருமான வரித்துறையின் சார்பில் ஆஜரான மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தேர்தல் நடைபெறுவதால், எந்த கட்சிக்கும் பிரச்சினை ஏற்படுவதை வருமான வரித் துறை விரும்பவில்லை.
எனவே, வரி நிலுவை தொடர்பாக ஜூலை 24 ந்தேதி வரை காங்கிரஸுக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது’ என்று உத்தரவாதம் அளித்தார். அவரின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.