செய்திகள்

காங்கிரசுக்கு ரூ.1823 கோடி நோட்டீஸ்: மோடியின் அப்பட்டமான தோல்வி பயம்

செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை, மார்ச் 30–

அகில இந்திய காங்கிரஸ் கட்சி ரூ.1823 கோடி பணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது மோடியின் அப்பட்டமான தோல்வி பயம் என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பாராளுமன்ற பொதுத்தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டுவரும் இந்த வேளையில், கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை சட்டவிரோதமாக பாஜக அரசு வருமான வரித் துறையின் மூலம் முடக்கியது. அதன் தொடர்ச்சியாக, வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1823.08 கோடி வரிநிலுவை செலுத்த வேண்டும் என்று புதியதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மோடியின் தோல்வி பயம்

ஏற்கனவே வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து வலுக்கட்டாயமாக 135 கோடி ரூபாயை சட்டவிரோதமாக அபகரித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை இதன்மூலம் முடக்கி விடலாம் என்று பாஜக அரசு தப்புக்கணக்கு போட்டுள்ளது. இதற்காக, தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித்துறையை சட்டவிரோதமாக, தன்னுடைய சுயலாபத்திற்காக பாஜக பயன்படுத்தும் இந்த செயல் மோடியின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.

கடந்த 2017 -18 முதல் 2020- 21ஆம் ஆண்டு காலத்திற்கான ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கை, தற்பொழுது தூசி தட்டி எழுப்பி சட்ட விரோதமாக ரூபாய் 1823.08 கோடி வருமான வரி பாக்கி என்று இந்த தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது பழிவாங்கும் போக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்க்கின்ற செயலாகும்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கின்ற இத்தருணத்தில் காங்கிரஸ் கட்சி மீது ஏவிவிடப்படுகின்ற வருமான வரித்துறையின் வரி விதிப்பு தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாநில தலைநகரிலும் மற்றும் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *