செய்திகள்

காங்கிரசுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரி: மொத்தம் ரூ.3,567 கோடி செலுத்த நோட்டீஸ்

டெல்லி, மார்ச் 31–

காங்கிரஸ் கட்சி மேலும் 3 ஆண்டுகளுக்கு ரூ.1745 கோடி உள்ப,ட மொத்தம் ரூ.3567 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சி, கட்சியாக பெற்ற வருமானத்திற்கு முறையாக வரி செலுத்த வேண்டும் எனக் கூறி பல்வேறு கால கட்டங்களை சுட்டிக்காட்டி கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் ரூ.1,823 கோடி வரி செலுத்த வரிமான வரித்துறை திடீரென்று நோட்டீஸ் அனுப்பியது. ஒன்றிய பா.ஜ.க அரசு வரி தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்தது. நேற்று வரிமான வரித்துறை, பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மேலும் 3 ஆண்டுகளுக்கு வரி அறிவிப்பை வெளியிட்டு ரூ.1,745 கோடி செலுத்த வேண்டும் என புதிய நோட்டீஸை வருமான வரித்துறை அனுப்பி உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.3,567 கோடி வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மொத்தம் ரூ.3567 கோடி

கடந்த வெள்ளிக் கிழமை அன்று அளிக்கப்பட்ட நோட்டீஸில் 1994-95 மற்றும் 2017-18 முதல் 2020-21 வரை மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,823 கோடி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று அனுப்பப்பட்ட நோட்டீஸில் 2014-15 முதல் 2016-17 வரையிலான 3 ஆண்டுகளுக்கு மேலும் ரூ.1,745 கோடி வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து 135 கோடி ரூபாய் பணத்தை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வரிக்கணக்குகளை கையாளும் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற பாஜக விருப்பத்தை விசுவாசத்துடன் கடைப்பிடித்ததற்காக, வருவாய்த் துறையின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பாஜக நன்றி பாராட்ட வேண்டும். ஆனால் அவர்கள் இந்திய மக்களின் புத்திசாலித்தனத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தவறாக மதிப்பிட்டுள்ளனர். இந்திய வாக்காளர்கள் எதேச்சதிகார நடத்தையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியமில்லை’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *