செய்திகள்

காங்கிரசில் தேர்தல்மூலம் தான் இனி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு: ப.சிதம்பரம் தகவல்

காரைக்குடி, மார்ச் 19–

காங்கிரஸில் இனி தேர்தல் மூலமாகத்தான் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

திருப்பத்தூர், காரைக்குடி தொகுதிகளில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ப.சிதம்பரம் பேசியதாவது:– காங்கிரஸுக்கு உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31 வரை நடக்கிறது. அதன் பிறகு வட்டார, நகர, மாவட்ட, மாநில கமிட்டிக்கான தேர்தல் நடக்கும்.

காங்கிரஸில் இனி தேர்தல் மூலமாகதான் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். நேரடி நியமனம் இருக்காது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்படுவார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சில இடங்களில் எதிர்பார்க்காத சரிவு ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராத சரிவு

உத்தரப்பிரதேசத்தில் கிடைத்த தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், பஞ்சாபில் எதிர்பாராத சரிவு. கோவாவில் முதல் மதிப்பீட்டில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோமோ, அதுதான் கிடைத்துள்ளது.

உத்தராகண்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற சூழல் இருந்ததாக சொன்னார்கள். ஆனால், அந்தவாய்ப்பும் தவறிவிட்டது. மணிப்பூரில் கட்சிக்குள் ஏராளமான பிரச்சினை இருந்ததால், அங்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஆரம்பத்திலேயே கிடையாது. இதனால் ஒட்டுமொத்தமாக சோர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த சோர்வை நீக்க வேண்டும் என்றால், அது தலைவர்களால் மட்டும் முடியாது. அடிமட்ட உறுப்பினர்களும் சேர்ந்துதான் சரிசெய்ய முடியும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.