நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேச்சு
டெல்லி, டிச. 18–
காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதாவின் 16 ஆண்டு ஆட்சியில் 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்த போது மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, “அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி 368-ல் உள்ளது.
அரசியலமைப்பு மாற்றம்
காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்து அரசியலமைப்பில் 77 மாற்றங்களைச் செய்தது. பா.ஜ.க 16 ஆண்டுகள் ஆட்சி செய்து 22 மாற்றங்களை மட்டுமே செய்துள்ளது. மாற்றங்களைச் செய்ததன் நோக்கம் என்ன? ஜனநாயகத்தை வலுப்படுத்துவதா அல்லது அதிகாரத்தில் நிலைபெறுவதற்காக மாற்றப்பட்டதா?
நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கிறது என்ற கூற்றுக்கள் ஒரு அரசியல் வித்தை மட்டுமே. கடந்த 75 ஆண்டுகளில், அரசியல் சாசனத்தின் பெயரால் காங்கிரஸ் மோசடி செய்தது. அவர்கள் கட்சியை மட்டும் தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதாமல், அரசியல் சாசனத்தை தங்கள் ‘தனியார் சொத்தாக’ கருதுகிறார்கள்” என்று அமித் ஷா காட்டமாக விமர்சித்துள்ளார்.