செய்திகள்

‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பிகில்’ புகழ் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

டைரக்டர்கள் கவுதம் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்ட படவுலகத்தினர் அஞ்சலி

சென்னை, மார்ச் 30–

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு காலமானார். அவருக்கு வயது 49. ‘திடீர்’ மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி திரை உலகை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘சின்னத்திரை’ மூலம் வெள்ளித்திரைக்குள் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படம் திருப்புமுனையாக அமைந்தது.

ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். டேனியல் பாலாஜி தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல வெற்றிப் படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தயிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் உள்ளிட்ட கலையுலகத்தினர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

கண்கள் தானம்

தனது கண்களை தானம் செய்வதாக டேனியல் பாலாஜி உறுதி அளித்திருந்தார். அதன்படி, புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் மருத்துவர்கள் வந்து கண்களை தானமாகப் பெற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *