செய்திகள்

‘‘காக்கும் பணி எங்கள் பணி”: தீயணைப்பு, மீட்புப் பணி பணியாளர்களின் மகத்தான கடமை

சென்னை, ஜூலை 20–

‘காக்கும் பணி எங்கள் பணி” என்று மகத்தான கடமையாற்றி வருபவர்கள் தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்தோடு கூறினார்.

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நகர்ப் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் மாறிவரும் இன்றைய சூழலை சமாளிக்க, நவீன ஊர்திகள் மற்றும் உபகரணங்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தீத்தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளில் மேம்படுத்தப்பட்ட பயிற்சித் திறன் போன்றவற்றை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது.

2018–2019ம் ஆண்டு வரை இத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது 78 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 62 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டும், மீதமுள்ள அறிவிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டும், விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

* 2018ம் ஆண்டில் 4,269 அரசு கட்டடங்களுக்கு தீ தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், 8,993 கட்டடங்கள் தீப்பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தவிர பல்வேறு மருத்துவமனைகளில் அவசர காலங்களில் செயல்படுவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை 22,601 தீ விபத்து அழைப்புகளில் 292.84 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், 69 மனித உயிர்களையும் காப்பாற்றியதோடு, 25,525 மீட்பு அழைப்புகளில் 4,610 மனித உயிர்களையும் இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றி, துறையின் அடிப்படை நோக்கமான ‘‘காக்கும் பணி எங்கள் பணி” என்பதற்கேற்ப செயலாற்றி வருகின்றது.

இத்துறை பணியாளர்களின் பணித்தரத்தை மேம்படுத்த ஏதுவாக கடந்த ஓராண்டில் பல சீரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. உதாரணத்திற்கு,

வீரமரணம் கருணைத்தொகை: ரூ.10 லட்சமாக உயர்வு

* வீரமரணமடைந்த தீயணைப்பு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. நிரந்தர ஊனமடைந்தவர்கள், கடும் காயமடைந்தவர்கள், சிறு காயமடைந்தவர்களுக்கு கருணைத் தொகைகள் இரட்டிப்பாக உயர்த்தி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

* இத்துறை பணியாளர்களுக்கு எதிர்பாரா மருத்துவ நல நிதிக்கு ஆண்டொன்றிற்கு 50 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதன் மூலம், இரண்டு தீயணைப்பு வீரர்களின் கொடும் தீக்காயங்களுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் உயிர் காக்கப்பட்டது.

* பணியில் இருக்கும் போது மரணமடையும் காவல் துறையினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே நிவாரணத் தொகையை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணியாற்றுவோருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டு இது வரை 92 நபர்களின் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர்.

* கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இத்துறைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் முதுநிலை நிர்ணயிப்பதில் இருந்து வந்த தேக்க நிலை, 1,000-த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை தரம் உயர்த்துவதன் மூலம், அவர்களது நெடுநாளைய கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

* 3,980 தீயணைப்போருக்கு தீப்பாதுகாப்பு உடைகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அவசியத்தை கருதியும், அத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்றும், இரண்டு கூடுதல் இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் நம் அனைவரின் எதிர்பார்ப்புக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் சட்டப்படி தங்கள் கடமைகளை செவ்வனே செய்து, வருங்காலத்திலும் அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *