சிறுகதை

காக்கா கூடு – ராஜா செல்லமுத்து

உணவு உடை இருப்பிடம் இந்த மூன்று அடிப்படை வசதிகள் தான் மனிதனுக்கு தேவையானது. உடையை தவிர்த்து உணவும் இருப்பிடமும் மற்ற ஜீவராசிகளுக்கும் அவசியமானது.

ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.

காலை நேரம் என்பதால் வரும் பேருந்துகள் எல்லாம் கூட்டமாக சென்றது .

ஏதாவது ஒரு பேருந்து கூட்டம் இல்லாமல் இருக்கும் ஏறிச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் வந்த பேருந்துகளில் அத்தனை பேருந்துகளும் கூட்டமாகவே இருந்தன.

சரி அரை மணி நேரம் ஆகட்டும் அதுக்கு அப்புறம் போகலாம் என்று அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து அரசு அலுவலகங்கள் இருக்கும் ஒரு கட்டிடத்தின் கீழ் ஒதுங்கி நின்றேன்.

அப்போதுதான் நான் கண்ட காட்சி பெரிய வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

நிறைய ஆட்கள் நின்று கொண்டிருக்கும் அந்த பேருந்து நிலையத்தில் ஒரு காகம் யாரையும் பொருட்படுத்தாது மரத்தில் இருந்து லாவகமாக இறங்கி கீழே கிடக்கும் கம்பியை தன் வாயில் தூக்கியது .

அதன் பின்னால் இருந்த அந்த கம்பி சுருட்டியும் இருந்தது. கம்பியை பிடித்து அந்தக் காகம் தூக்கும்போது முடிச்சாக சுருட்டி வைக்கப் பட்ட அந்த கம்பியைத் தன் அழகால் தூக்க முடியவில்லை. கீழே போட்டது .

இதை அந்தப் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

தன் முயற்சியில் சிறிதும் அந்தக் காக்கை மறுபடியும் கீழே இறங்கி அந்தக் கம்பியைத் தூக்கியது. நீளமான அந்த கம்பிகள் முடிச்சுப் பகுதியை தூக்க முடியாமல் மறுபடியும் கீழே போட்டது அந்தக் காகம். மறுபடியும் மறுபடியும் அதைச் செய்து கொண்டே இருந்தது. இதை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் மனிதர்களெல்லாம் மனிதர்களை பார்ப்பதும் மனிதர்களுக்கு தேவையான விஷயங்களை தேடுவதும் ஆக இருக்கும். இந்த உலகத்தில் ஒரு உயிரினத்தின் தேவையை யார் அறியப் போகிறார்கள்? அதுவும் வெறும் காகம் அதனுடைய செயல்பாட்டை அதனுடைய நடவடிக்கை யார் கவனிப்பார்கள்? ஆனால் நான் கவனித்தேன்.

மறுபடியும் மறுபடியும் அந்த கம்பியை காக்கையால் தூக்க முடியவில்லை.

அவ்வளவு ஆட்கள் இருந்தும் கூட யாரையும் கவனிக்காமல் தன்னுடைய செயலிலேயே தீவிரமாக இருந்தது.

ஒரு கட்டத்திற்குப் பின் அந்த காகம் முடிச்சாக இருந்த கம்பிச்சுருள் தன் வாயால் கவ்வியது , காலில் மிதித்துக்கொண்டு தன் வாயாலே அங்கும் இங்கும் அங்கும் இங்கும் ஆட்டிக் கம்பியை பிடித்து ஒடித்தது.

ஆஹா சபாஷ் என்று உச்சுக் கொட்டியது நான். அதிகமான அந்தக் கம்பிகளை தூக்கிப்போட்டுவிட்டு எடை குறைவான அந்த கம்பியை தூக்கிக் கொண்டு அழகாக பறந்தது.

எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. என்ன ஒரு இயற்கை. கடவுள் எப்படி எல்லாம் உயிர்களை வாழ வைக்கிறான். அது அதற்கு அதன் அறிவு ; அந்தக் கம்பியை கொண்டு போய் எவ்வளவு அழகாக வீடு கட்டும். அந்த கம்பி எடுப்பதற்காக யாரையும் அது கூப்பிடவில்லை. யாரையும் அது உதவி கேட்கவில்லை. முயற்சி செய்து முயற்சி செய்து கடைசியில் வெற்றி கண்ட பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆயிரம் பதில்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன.

துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்தபடியே பேருந்து நிலையம் வந்தேன்.

அப்போது வந்த பேருந்து காலியாக இருந்தது. அதில் ஏறி அமர்ந்தேன்.

பேருந்து புறப்பட்டது. அந்த காகத்தின் பெரும் முயற்சி மட்டும் இன்றும் என் நினைவில் இருந்து அழியவே இல்லை.

அந்தக் காகத்தின் பெரும் முயற்சி , அரிய செயல்கள் …..

எனக்குள்ளும் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.