போஸ்டர் செய்தி

கஸ்தூரிபா அரசு தாய் சேய் மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய்ப்பால் வங்கி

சென்னை:-

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய் சேய் நல மையம் (கர்ப்பிணிகளுக்கான ஆரோக்கிய உணவு, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்முறை), தாய்ப்பால் வங்கி ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் தாய் சேய் நல விழிப்புணர்வு பூங்கா, கண்காட்சி மற்றும் ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் தங்கும் அறைகளை பார்வையிட்டார். பின்னர் இம்மருத்துவமனையில் குழந்தைகள் காணாமல் போவதை தடுப்பதற்காக தாய் மற்றும் குழந்தையின் கையில் ரேடியோ அதிர்வெண் அடையாள காப்பினை அணிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:-

1885–ம் ஆண்டு பர்தா (கோஷா) அணிந்த பெண்களுக்காக நுங்கம்பாக்கம் மூர்ஸ் கார்டனில் ‘தி ராயல் விக்டோரியா கோஷா ஹாஸ்பிடல் பார் உமன்’ (The Royal Victoria Gosha Hospital For Women) என்ற பெயரில் இம்மருத்துவமனை நிறுவப்பட்டு 1948–ம் ஆண்டு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது 675 படுக்கைகளுடன் 5 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை வருடத்திற்கு 7500–க்கும் மேற்பட்ட பிரசவம் மற்றும் 8000–த்திற்கும் மேற்பட்ட மகளிர் நோயியல் அறுவை சிகிச்சை, 2000–க்கும் மேற்பட்ட குடும்ப நல அறுவை சிகிச்சைகளை செய்யும் மருத்துவமனையாக உயர்ந்துள்ளது. 1986–ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சிறப்பு சிறுநீரக நோாயியல் துறை நிறுவப்பட்டது.

தீவிர கண்காணிப்பு மையம்

1.3.2013–ல் புரட்சித்தலைவி அம்மாவால் ‘‘முதன்மை நிலை தனிச்சிறப்பு மையம்’’ என பெயர் சூட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறு காலப்பிரிவு, ரத்த வங்கி, அவசர சிகிச்சைப்பிரிவு ஆகியவை உள்ளன. 50 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்பு மையம் நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது. மேலும், மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் இருதய நோய்களுக்கான தனி தீவிர கண்காணிப்பு பிரிவுகளும் உள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 7,479 நபர்கள் சிகிச்சை பெற்று அதன் மூலம் ரூ.10.79 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

14,530 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்

தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஐஓஜி, ஐசிஎச் மற்றும் திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய 12 மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் ரூ. 1.5 கோடி செலவில் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும். இதுவரை 14,530 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனர். 12,316 குழந்தைகள் தாய்ப்பால் தானம் பெற்றுள்ளனர். மேலும் இம்மருத்துவமனையின் செவிலியர் பயிற்சி கல்லூரிக்கு புதிய கட்டிடம் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.1.75 கோடி மதிப்பில் இம்ருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் கருவி விரைவில் வழங்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, கஸ்தூரிபாய் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குனர் விஜயா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *