நம் உரிமையை மீட்க வாருங்கள்
நாகை, மார்ச். 3–
‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில் கவுரவம் பார்க்காதீர்கள். தமிழகத்தின் பிரச்சனை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சனையை அரசியலாகப் பார்க்காமல் வாருங்கள்’’ என்று கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று சொல்லி இருக்கும் சில கட்சிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க., நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: –
‘‘வருகிற 5ம் தேதி நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பெரும்பாலும் கட்சியினர் வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் நாங்கள் வர வாய்ப்பு இல்லை, வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர முடியாது, வர இயலாது என்று சொல்லி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இது தனிப்பட்ட பிரச்னை அல்ல. இது தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழகத்தின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தால் தான் நாம் உரிமையை மீட்க முடியும். எனவே, அனைவரும் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று நினைக்காதீர்கள். இது தமிழகத்தின் பிரச்னை, நம்ம உரிமைகள் பறிபோகும் பிரச்னை, அரசியலாக பார்க்காமல் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.