முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை, மே 11–-
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள், தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.
வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–-
கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனை அடைந்தேன்.
தமிழையும், அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தாயார் மறைவையொட்டி, வைரமுத்து எழுதியுள்ள கவிதை அஞ்சலியில் கூறியிருப்பதாவது:–-
ஆயிரம் தான் கவி சொன்னே… அழகா அழகா பொய் சொன்னே… பெத்தவளே உன் பெரும ஒத்தவரி சொல்லலியே.
காத்தெல்லாம் மகன் பாட்டு, ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலயே…
வைகயில ஊர்முழுக, வல்லூரும் சேர்ந்தழுக, கைபிடியா கூட்டி வந்து கரசேர்த்து விட்டவளே… எனக்கொன்னு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளை உண்டு, உனக்கு ஒன்னு ஆனதுன்னா எனக்கு வேற தாய் இருக்கா….
இவ்வாறு கவிதை அஞ்சலியில் கூறியுள்ளார்.
அங்கம்மாள் இறுதி சடங்கு வடுகபட்டியில் இன்று நடக்கிறது.