கவிஞர் வைரமுத்து உணர்ச்சிமிகு உரை
சென்னை, ஜூன் 3–
‘‘இன்றைக்கு தமிழ் சினிமா கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. ஆனாலும் சினிமா என்றுமே அழிந்து விடாது அதற்கு அழிவும் கிடையாது’’ என்று கவிஞர் வைரமுத்து உறுதிப்படக் கூறினார்.
‘‘அறிவியல் முன்னேற்றத்தால் கால மாற்றம் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது போலவே திரைப்படத் துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கால மாற்றத்திற்கு ஏற்ப படைப்பாளிகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தங்களை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள முடியும்’’ என்றும் அவர் அனுபவம் பேசினார்.
“வேட்டைக்காரி”- ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் படம். காளிமுத்து காத்தமுத்து இயக்குனர். புதுமுகம் ராகுல் கதாநாயகன். சஞ்சனா சிங் கதாநாயகி. இசையமைப்பாளர் ராம்ஜி.
படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் ,வைரமுத்து இயக்குனர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்து கூறினார்கள்.
‘‘படங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயரை சூட்டுங்கள். அதனால் தமிழ் நீட்சி அடைகிறது. தமிழ் ஆட்சி செய்கிறது. அழகான நல்ல தலைப்பு வைக்கப்படுகிறபோது அது உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது’’ என்று வைரமுத்து குறிப்பிட்டார்.
‘‘எப்போதெல்லாம் ஒரு கவிஞன் தன் கவிதையை பாடல்களில் சேர்க்கிறானோ, அப்போதெல்லாம் தமிழ் உச்சம் அடைகிறது. பாடல்களில் கவிதை இருப்பதன் மூலம் மக்கள் கவிதையை ரசிக்கிறார்கள்’’ என்றார் அவர்.
அசோகனின் மகன் வின்சென்ட் செல்வா-–வில்லன். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.