நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டம்
புதுச்சேரி, மார்ச் 18–
நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடலாம் என ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது. அது பற்றிய கேள்விக்கு தமிழிசை, “கவர்னர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது தவறான செய்தி. கட்சி மேலிடம் என்ன உத்தரவிடுகிறதோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். எப்போதும் மக்களுக்காக நான் இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன். எனவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் தமிழிசை சவுந்தராஜன் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி துணை நிலை கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தராஜன் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக உள்ளார். கவர்னராக தன்னை வெறும் மாளிகைக்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, மக்களுடன் கலந்துரையாடுவது உள்ளிட்ட பணிகளை தமிழிசை செய்து வந்தார். எனவே புதுச்சேரி தொகுதி தமிழிசைக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கன்னியாகுமரியை பொறுத்தவரை அத்தொகுதி தமிழிசை சவுந்தராஜனின் பூர்வீக தொகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது. அத்தொகுதில் ஏற்கெனவே மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழிசை பெயரும் இடம் பெறுகிறது.
ஏற்கெனவே கடந்த 2011ம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியிலும், 2016ம் ஆண்டு தனது இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.