பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை
சேலம், ஜூன் 27–
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொள்ளவுள்ள நிலையில், யாரும் கறுப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை (28-ம் தேதி) பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கறுப்பு உடை அணியக்கூடாது
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர வேண்டும். செல்போன்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். சேலம் மாவட்ட காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி இது கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.