கட்சியில் இருந்து நிரந்தர நீக்கம்:
பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 19–
கவர்னர், குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இச்சையாக பேசி சர்ச்சையில் சிக்குவது அவரது வாடிக்கையாக உள்ளது. சரவெடியான கருத்துகளை கூறி சர்ச்சை என்ற மாய வலைக்குள் விழுவதும், எழுவதுமாக இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை தரம் தாழ்ந்தும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.
இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் 4 மாதங்களுக்கு பின்னர் கடந்த மே மாதம் 17-ந்தேதியன்று மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். கட்சியில் சேர்ந்து ஒரு மாதம் ஆன நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கண்கலங்கிய குஷ்பு
கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு ஆகியோர் பற்றி சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மிகவும் தரம் தாழ்ந்தும், கண்ணிய குறைவாகவும், கொச்சையாகவும் விமர்சித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான தனது ஆதங்கத்தை கண் கலங்கியபடி வெளிப்படுத்தினார்.
குஷ்பு தனது வருத்தத்தை பதிவு செய்த ஒரு சில நிமிடங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
கைது
கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாக பேசியதாக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (வயது 63) மீது பா.ஜ.க. சார்பில் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.