காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்
டெல்லி, ஜன. 12–
கர்னர்களை கட்சி ஊழியர்களாக பயன்படுத்தி ஆளுநர் பதவியை இழிவுபடுத்த, பாரதீய ஜனதா திட்டமிடுகிறது என்று மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது சட்டப் பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த போது, தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே, திடீரென ஆளுநர் வெளியேறி சென்றார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்
இந்த விவகாரம் தொடர்பாக பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
“இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பயன்படுத்தி, அந்த பதவியை இழிவுபடுதுவதற்காக பாரதீய ஜனதா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான ஒருவிதமான தாக்குதல். அண்மையில், சில மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியல் சட்டத்தை மீறியது, இந்திய அரசியலின் கூட்டாட்சி முறையின் பெருமையை சீர்குலைத்துள்ளது.
ஆளுநர்களும், அரசியல் சட்ட கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டும். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சட்டப் பேரவையை இழிவுபடுத்தக்கூடாது. பாஜக இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், சமூக மற்றும் அரசியல் பதற்றத்தை ஏற்படுதுவதற்கு ஆளுநர்களை அவர்களின் டெல்லி எஜமானர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஆபத்தான ஒன்று என்று மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.