சென்னை, ஜூன் 27 –-
கவர்னரின் ஒப்புதலுக்காக 13 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தமிழக சட்டத்துறை கூறியுள்ளது.
மாநில அரசு சார்பில் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றால், சட்டசபையில் அது குறித்த மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும். அந்த மசோதாவுக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்க வேண்டும். அப்படி ஆதரவு கிடைக்கப் பெற்ற மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, அந்த மாநில கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். கவர்னரின் ஒப்புதலை பெற்ற பின்னரே அது சட்டமாக, அரசாணை மற்றும் அரசிதழில் வெளியிடப்படும்.
அந்த வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக சட்டத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலில் இந்த விவரம் இடம் பெற்றுள்ளது.
அதில் 2 மசோதாக்களான தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைஅறிவியல் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா ஆகியவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. ஆட்சியின்போது 2020-ம் ஆண்டு ஜனவரியில் அனுப்பப்பட்டதாகும். அப்போது பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்தார்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக (திருத்தம்) மசோதாவில், பல்கலைக்கழக வேந்தருக்கு (கவர்னர்) பதிலாக ஆய்வுக்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கவேண்டும் என்றும் துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவில் அரசின் பிரதிநிதி ஒருவரை இடம் பெற செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
எது உண்மை?
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதாவில், ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளும் கவர்னரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2021–-ம் ஆண்டு செப்டம்பரில் ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக பதவி ஏற்றார். கடந்த மே மாதம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த கவர்னர் ஆர்.என்.ரவி, ‘தன்னிடமோ அல்லது ராஜ்பவனிலோ நிலுவையில் எந்தவொரு மசோதாவும் நிலுவையில் இல்லை’ என்றும் ‘சித்த மருத்துவ பல்கலைக்கழக உருவாக்கம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்புடைய 8 மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும்’ கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘கவர்னரிடன் அனுமதிக்காக 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக’ குறிப்பிட்டார். மேலும், ‘மசோதாக்களை நிலுவையில் வைப்பதற்கும், நிறுத்தி வைத்திருப்பற்கும் சட்டப்பூர்வமாக என்ன அர்த்தம்? என்பதை கவர்னர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் நிலுவையில் உள்ள மசோதாக்களின் எண்ணிக்கை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் விவரம் கோரப்பட்டது. அதற்கு, கடந்த ஆண்டு 48 மசோதாக்களுக்கும், இந்த ஆண்டு 21 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதாக பதில் அளிக்கப்பட்டது. சட்டசபையில் மறுபடியும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவும் அடங்கும்.
இதுபற்றி தமிழக சட்டத்துறையில் விசாரித்தபோது, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் (திருத்த மசோதா); சென்னை பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா (ஜனாதிபதியின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது); அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா;
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் (இரண்டாம் திருத்தம்) ; மேலும் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (திருத்தம்) ; தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா உள்பட மொத்தம் 13 மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன.
அவற்றில் பல மசோதாக்கள், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் உறுப்பினராக நிதித்துறை செயலாளரை இணைக்கவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட மசோதாவும் நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது.